ஏழு ஆண்டுகளில் காணாத உச்சத்தை எட்டிய மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு

2 mins read
e3b74610-1559-45a3-9127-85a9767e09f4
அமெரிக்க டாலர், மலேசிய ரிங்கிட் நோட்டுகள். - படம்: எஸ்பிஹெச் ஊடகம்

கோலாலம்பூர்: செயற்கை நுண்ணறிவு சார்ந்த விநியோகத் தொடர் ஏற்படுத்தியுள்ள பிணைப்பும், நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் இணைந்து மலேசிய ரிங்கிட்டின் மதிப்பைத் தொடர்ந்து உயர்த்தி வருகின்றன.

கடந்த 2018ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் காணப்படாத அளவுக்கு அதன் மதிப்பு உச்சத்தை எட்டியுள்ளது. ஒரு சிங்கப்பூர் வெள்ளிக்கு 3.1276 ரிங்கிட் என்ற நிலையில் திங்கட்கிழமை (ஜனவரி 26) காலை 9.35 மணிக்கு அது வர்த்தகம் செய்யப்பட்டது. மேலும், கடந்த 12 மாதங்களில் சிங்கப்பூர் வெள்ளிக்கு நிகராக 4.6 விழுக்காடு அளவுக்கு மலேசிய ரிங்கிட் வளர்ச்சி கண்டுள்ளது.

அதே நாளில் அமெரிக்காவின் ஒரு டாலருக்கு 3.9750 ரிங்கிட் என்ற நிலையில் மலேசிய நாணயம் வர்த்தகம் செய்யப்பட்டது. கடந்த 2018ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்து ஒப்பிடும்போது அது 0.8 விழுக்காடு ஏற்றமாகும். இவ்வாண்டின் முதல் காலாண்டில் இதே ஏற்றம் தொடரும் என்று காமா அசெட் எனும் சொத்து நிர்வாக அமைப்பு கணித்துள்ளது.

இந்த ஆண்டு முழுவதும் மலேசியாவின் வளர்ச்சி தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுற்றுலாத் துறையின் முன்னெடுப்புகளால் பல வெளிநாட்டவர்கள் அங்கு பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அங்கு நிறுவப்பட்டு வரும் பல தரவு நிலையங்கள் புதிய வாய்ப்புகளை வழங்குவதோடு, முதலீடுகளையும் ஈர்த்துவருகின்றன.

இவ்வாண்டு ஜனவரி மாத கணிப்பின்படி, வளர்ந்துவரும் ஆசியாவின் நாணயங்களில் உச்சத்தில் உள்ளது மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு. முதல் காலாண்டில் கணிப்பாளர்களின் எதிர்பார்ப்புகளையும் மலேசிய ரிங்கிட் விஞ்சிவிட்டது.

தொழில்நுட்ப ஏற்றுமதிகள், வெளிநாட்டு நேரடி முதலீடுகள் இவற்றோடு, மலேசிய மத்திய வங்கி வட்டி விகிதங்களை மாற்றாமல் செயல்பட்டால், 2026ஆம் ஆண்டிலும் தென்கிழக்காசிய வட்டார நாடுகளின் நாணயங்களின் மதிப்பைவிட ரிங்கிட் ஏற்றம் காணும் என்பது நிதி நிபுணர்களின் கருத்து.

குறிப்புச் சொற்கள்