கோலாலம்பூர்: பண்டார் உத்தமா பள்ளியில் அக்டோபர் 14ஆம் தேதி கொலைச் சம்பவம் நடந்தது. 14 வயது மாணவர் 16 வயது மாணவியைக் குத்திக் கொன்றதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
இந்நிலையில், மலேசிய நீதிமன்றத்தில் புதன்கிழமை (அக்டோபர் 22) அந்த 14 வயது இளையர்மீது குற்றஞ்சாட்டப்பட்டது. அப்போது அவர்மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டன. அதற்கு அவர் மறுப்பு ஏதும் தெரிவிக்கவில்லை.
இளையர் அக்டோபர் 14ஆம் தேதி காலை 9 மணிவாக்கில் பள்ளியில் உள்ள பெண்கள் கழிவறையில் 16 வயது மாணவியைக் கத்தியால் பலமுறை குத்தியதாக ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இளையர்மீது குற்றவியல் எண் 302கீழ் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. அது கொலைக்கான குற்றச்சாட்டாகும். மாணவர் இளையர் என்பதால் வழக்கு விசாரணையின்போது சிலர் மட்டுமே நீதிமன்றத்தில் இருக்க அனுமதி வழங்கப்பட்டது.
கத்திக் குத்து தாக்குதலில் மாண்டவர் யப் சிங் சூவென் என்னும் மாணவி ஆவார். சம்பவத்திற்குப் பிறகு அந்த இளையர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து மூன்று கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன.
மலேசியாவில் பள்ளிகளில் வன்முறை சம்பவங்கள் நடக்காமல் இருக்க கடுமையான சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

