பெட்டாலிங் ஜெயா: சிலாங்கூரிலுள்ள பண்டார் உத்தாமா உயர்நிலைப் பள்ளியில் சென்ற ஆண்டு 16 வயது மாணவி யாப் ஷிங் சூயென் குத்திக் கொல்லப்பட்ட வழக்கில், நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மலேசிய அரசாங்கத் தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகம் மேல்முறையீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தும் இணைய மனுவிற்கு, உயிரிழந்த மாணவியின் தாயார் வோங் லீ பிங் ஆதரவு தெரிவித்துள்ளார். பொதுமக்களும் அதற்கு ஆதரவு தரவேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
மனச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டதாக மருத்துவர் சாட்சியமளித்ததைத் தொடர்ந்து, குற்றம் சாட்டப்பட்ட 15 வயதுச் சிறுவனை மனநலக் காப்பகத்தில் சிகிச்சை பெற உத்தரவிட்டு ஷா ஆலம் உயர் நீதிமன்றம் விடுவித்தது.
நீதிமன்றத்தின் முடிவை மதிப்பதாகத் தமது ஃபேஸ்புக் பதிவில் திருவாட்டி வோங் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தார் என்ற முறையில் உரிய சட்ட நடைமுறைகள் பின்பற்றப்படும் என்று தாங்கள் கருதுவதாக அவர் சொன்னார். சட்டப்படி இவ்வழக்கில் மேல்முறையீட்டு உரிமை சரியாகப் பயன்படுத்தப்பட வேண்டும் எனத் திருவாட்டி வோங் கோரினார். மகளை இழந்த ஒரு தாயின் குரல் செவிமடுக்கப்பட வேண்டும் என்பதே தமது கோரிக்கை என்றார் அவர்.
மேலும், பள்ளிப் பாதுகாப்பிலும் குழந்தைகளின் நலனிலும் அக்கறையுள்ள பொதுமக்கள், இந்த மேல்முறையீட்டு மனுவில் கையெழுத்திட்டுத் தங்கள் ஆதரவை வழங்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
