கோலாலம்பூர்: மலேசிய மாணவர்கள் மேற்படிப்புக்குச் சீனப் பல்கலைக்கழகங்களை நாடும் போக்கு அதிகரித்துள்ளது.
கட்டுப்படியாகும் கல்விக் கட்டணம், சீனாவில் அதிகரித்துவரும் முன்னிலைப் பல்கலைக்கழகங்களின் பெருமை, கல்வி உபகாரச் சம்பளங்கள் ஆகியவற்றால் அவர்கள் ஈர்க்கப்படுகின்றனர்.
சீனப் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் பயின்ற மலேசியப் பட்டதாரிகள் சங்கத்தின் தரவுகளின்படி, 2007ஆம் ஆண்டு மலேசிய மாணவர்கள் ஏறக்குறைய 1,800 பேர் சீனாவில் பயின்றனர். 2019ல் இந்த எண்ணிக்கை 9,500ஆக அதிகரித்தது.
2023ஆம் ஆண்டு இத்தகைய மாணவர்களின் எண்ணிக்கை 10,000 என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் என்கின்றனர் கவனிப்பாளர்கள்.
சீனப் பல்கலைக்கழகங்களும் பல்வேறு அரசாங்க நிறுவனங்களும் பெருந்தன்மையுடன் கல்வி உபகாரச் சம்பளங்கள் வழங்குவதாக அவர்கள் கூறினர்.
சீனாவில் பயிலும்போதே வருங்கால வர்த்தக, பொருளியல் வாய்ப்புகளை வழங்கக்கூடிய உறவுகளை ஏற்படுத்திக்கொள்வது எளிது என்று அவர்கள் குறிப்பிட்டனர்.
அங்குள்ள முன்னணிப் பல்கலைக்கழகங்களின் பெருமை அதிகரிக்கும் நிலையில் மலேசியாவில் உள்ள சீன சமுதாயத்தினர் அவற்றின்பால் ஈர்க்கப்படுவதாகக் கூறப்பட்டது.
அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா போன்றவற்றைவிடச் சீனாவில் கல்விக் கட்டணமும் வாழ்க்கைச் செலவினமும் குறைவு என்பதால் குறிப்பிடத்தக்க அளவில் சேமிக்க இயலும்.
தொடர்புடைய செய்திகள்
மலேசியாவும் சீனாவும் 50ஆண்டு அரசதந்திர உறவைக் கொண்டாடும் வேளையில், மலேசியத் துணைப் பிரதமர் ஸாகித் ஹமிடி சீனாவில் பயிலும்படி இளம் மலேசியர்களை வலியுறுத்தியுள்ளார்.


