கோலாலம்பூர்: அனைத்துலக அளவில் நடைபெற்ற எந்திரனியல் விளையாட்டுப் போட்டியில் (World Robot Games 2025) மலேசிய மாணவர்கள் 80க்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்றனர்.
மலேசியாவின் 13 பள்ளிகள் சார்பில் போட்டிகளில் பங்கேற்ற 24 மாணவர்களை மனிதவள அமைச்சர் ரமணன் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 10) நாடாளுமன்றத்தில் சிறப்பித்தார்.
ரோபோட்டிக், ‘ஸ்டெம் (அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம்) துறையில் அவர்கள் போட்டியிட்டனர்.
உலகளவில் நடைபெற்ற அப்போட்டியில் சிங்கப்பூர், மலேசியா, தைவான், ஜப்பான், தென்கொரியா, இந்தியா, இந்தோனீசியா, தாய்லாந்து, வியட்னாம், பிலிப்பீன்ஸ் உள்ளிட்ட 10 நாடுகளைச் சேர்ந்த 1,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
போட்டியில் பங்கேற்ற மலேசிய மாணவர்கள் ஒவ்வொருவரும் குறைந்தது ஒரு பதக்கத்தையாவது வென்றுள்ளனர் என்றும் இது கடந்த ஆண்டை விட மிகச் சிறந்த முன்னேற்றம் என்றும் அமைச்சர் ரமணன் தெரிவித்தார்.
அப்போட்டிகளில் 13 வயதான கே. சச்சின் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். ஐந்து வயதிலிருந்தே ரோபோ உருவாக்கம், அதன் மென்பொருள் நுணுக்கங்களைக் கற்கத் தொடங்கிய இவர், கடந்த எட்டு ஆண்டுகால தொடர்பயிற்சியின் மூலம் இந்த வெற்றியைப் பெற்றுள்ளதாகத் திரு ரமணன் கூறினார்.
மாணவர்களின் இந்த வெற்றி மலேசியாவின் ‘ஸ்டெம்’ கல்வி முறையின் வலிமையைக் காட்டுவதாகவும், முறையான பயிற்சியும் வாய்ப்பும் வழங்கப்பட்டால் மலேசிய மாணவர்கள் உலகத் தரத்திற்குப் போட்டியிட முடியும் என்பதை இது நிரூபிப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.

