ஹனோய்: வியட்னாமின் ஞாட்ராங் நகரில் சனிக்கிழமையன்று (செப்டம்பர் 5) நடைபெற்ற 2026ஆம் ஆண்டுக்கான உலக அழகிப் போட்டியின் இறுதிச்சுற்றில், மலேசியத் தமிழ்ப் பெண்ணான 26 வயது தனுசியா செட்டி மூன்றாவது இடத்தைப் பிடித்துச் சாதனை படைத்தார்.
இதன் மூலம், 28 ஆண்டுகளுக்கு முன்பு 1998ஆம் ஆண்டு உலக அழகிப் போட்டியில் லீனா டியோ படைத்த சாதனையை தனுசியா சமன் செய்துள்ளார். உலக அழகிப் போட்டி வரலாற்றில் மலேசியா சார்பில் பங்கேற்று மிகச் சிறந்த நிலையை அடைந்தவர்களாக இவர்கள் இருவரும் திகழ்கின்றனர்.
சனிக்கிழமை (செப்டம்பர் 5) நடைபெற்ற வண்ணமயமான இறுதிச்சுற்று விழாவில், டோமிக்கன் குடியரசைச் சேர்ந்த ஜோஹேரி மோலா டொமிங்குவேஸ் உலக அழகியாக மகுடம் சூடினார்.
ஸ்பெயின் நாட்டின் எலிசபெத் ரெய்னஸ் அலபர்ன் இரண்டாம் இடத்தைப் பிடித்தார். ஏறத்தாழ ஒரு மாத காலம் நடைபெற்ற இந்தப் போட்டியில் உலகெங்கிலுமிருந்து பங்கேற்ற 110 போட்டியாளர்களைப் பின்னுக்குத் தள்ளி, தனுசியா தொடக்கம் முதலே சிறப்பான திறமையை வெளிப்படுத்தி முதல் மூன்று இடங்களுக்குள் நுழைந்தார்.
முன்னதாக, சமுதாய நலத்திட்டங்களில் போட்டியாளர்களின் ஈடுபாட்டையும் தாக்கத்தையும் அங்கீகரிக்கும் ‘நோக்கம் கொண்டுள்ள அழகிகள்’ என்ற முக்கியப் பிரிவில் ஸிம்பாப்வேயின் புருனெட் மகானிசோவை வீழ்த்தி வெற்றி பெற்றதன் மூலம் தனுசியா முதல் ஆறு இடங்களுக்கான சுற்றிலும் தகுதி பெற்றார்.
மாலை நேர ஆடை அணிவகுப்புச் சுற்றில், ‘மலேசிய உலக அழகி 2024/2025’ பட்டம் வென்ற தனுஷியா, வியட்னாம் ஆடை வடிவமைப்பாளர் மின் துவான் கூட்டூர் வடிவமைத்த இளஞ்சிவப்பு நிற ஆடையில் மிளிர்ந்தார்.
போட்டி முழுவதிலும் தமது தன்னம்பிக்கை மற்றும் தனித்துவமான ஆளுமையால் நடுவர்களைக் கவர்ந்த அவர், கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி நடைபெற்ற நேரடிச் சவால் சுற்றின் போது ஆங்கிலம், மலாய், மாண்டரின், தமிழ் ஆகிய நான்கு மொழிகளில் பேசிய காணொளி இணையத்தில் வேகமாகப் பரவி பெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன், 1994ஆம் ஆண்டில் ரஹிமா ஓர்ச்சியன் யாயா முதல் பத்து இடங்களுக்குள்ளும் 2007ஆம் ஆண்டில் டெபோரா ஹென்றி முதல் 16 இடங்களுக்குள்ளும் முன்னேறி மலேசியாவிற்குப் பெருமை சேர்த்திருந்தனர்.


