கோலாலம்பூர்: எரிபொருள் விலையேற்றம், மத்திய கிழக்குப் போர் காரணமாக மலேசியச் சுற்றுப்பயணத் துறை பெரும் சவால்களை எதிர்கொண்டு வருகிறது.
போக்குவரத்து, செயல்பாட்டுச் செலவுகள் அதிகரித்து வருவதால் சுற்றுலாப் பயணத் திட்டங்களுக்கான கட்டணம் 50 விழுக்காடுவரை உயரக்கூடும் என மலேசிய உள்நாட்டுச் சுற்றுப்பயணச் சங்கம் எச்சரித்துள்ளது.
குறிப்பாக, டீசல் விலை உயர்வால் சுற்றுலாப் பேருந்துகளின் வாடகை கிட்டத்தட்ட 83 விழுக்காடுவரை அதிகரித்துள்ளது.
ஈரான் போர்ச் சூழலால் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 5,000 முன்பதிவுகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாகச் சங்கத்தின் தலைவர் மிண்ட் லியோங், பிஸ்னஸ் டைம்சிடம் கூறினார்.
துபாய், தோஹா போன்ற முக்கிய விமான நிலையங்கள் வழியாக வரும் சுற்றுலாப் பயணிகளின் வருகை பாதிக்கப்பட்டுள்ளதால் தற்போதைய சூழல் சுற்றுப்பயண நிறுவனங்களுக்குப் பெரும் நட்டத்தை ஏற்படுத்தி வருகிறது.
முறையற்ற தங்குமிடச் சேவைகள்
முறையற்ற தங்குமிடச் சேவைகளின் ஆதிக்கமும் இத்துறைக்கு நெருக்கடியைத் தருகிறது.
“முறைப்படுத்தப்படாத குறுகியகாலத் தங்குமிட வழங்குநர்கள் மிகக் குறைந்த விலைக்கு அறைகளை வழங்குவதால் மலிவுக்கட்டண ஹோட்டல்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றன. தரத்தை விட்டுக்கொடுத்து அவர்களுடன் போட்டியிட முடியாது. அது நாட்டின் நற்பெயரையே பாதிக்கும்,” எனத் தெரிவித்தார் மலேசியச் சுற்றுப்பயணக் கூட்டமைப்பின் தலைவர் ஸ்ரீ கணேஷ் மிச்சியல்.
இழந்த நம்பிக்கையை மீட்டெடுக்கப் பல ஆண்டுகள் ஆகலாம் என்றும் அவர் கவலை தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
பயணிகளை ஈர்க்கப் புதிய உத்திகள்
சூழலைச் சமாளிக்கச் சுற்றுப்பயணப் பாதைகளைச் சீனா வழியாக மாற்றியமைப்பது, வட்டாரத் தேவைகளில் கவனம் செலுத்துவது உள்ளிட்ட மாற்று உத்திகளை ஆராய்ந்து வருவதாகவும் அதுகுறித்து வட்டார விமானச் சேவை நிறுவனங்களுடன் செயல்பட்டு வருவதாகவும் திருவாட்டி மிண்ட் கூறினார்.
மலேசியா, 2025ல் 42.2 மில்லியன் சுற்றுப்பயணிகளை ஈர்த்தது. அதற்கு முந்திய ஆண்டைவிட அது 11.2 விழுக்காடு அதிகம். இதன்மூலம் அந்நாடு 110.6 பில்லியன் ரிங்கிட் ஈட்டியது.
இந்த ஆண்டு 47 மில்லியன் சுற்றுப்பயணிகளை வரவேற்கவும் 147.1 பில்லியன் ரிங்கிட் வருமானத்தை ஈட்டவும் மலேசியா இலக்குக் கொண்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை (மார்ச் 31) சுற்றுலாப்பயண அமைச்சருடன் நடைபெறவுள்ள சந்திப்பில் இதற்குத் தீர்வு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

