கோலாலம்பூர்: சீனாவுக்குச் சுற்றுலா மேற்கொண்ட மலேசிய சுற்றுப்பயணக் குழு ஒன்று டாவ்பாவ் தளம் வாயிலாக 1,200 பார்சல்களை வாங்கி அவற்றைச் சீனாவில் உள்ள ஹோட்டலுக்கு அனுப்ப ஏற்பாடு செய்திருந்தது.
அதனால் அந்த பார்சல்கள் ஹோட்டலின் முன்தளத்தில் (lobby) எங்குப் பார்த்தாலும் கொட்டிக் கிடந்ததாக சைனா பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அச்சம்பவம் பதிவான காணொளியைச் சம்பந்தப்பட்ட சுற்றுப்பயணக் குழு சியாவ்ஹொங்ஷு சமூக ஊடகத் தளத்தில் பகிர்ந்துகொண்டது.
சம்பந்தப்பட்ட ஹோட்டல் சீனாவின் சியான் நகரில் உள்ளது. அங்குள்ள ஊழியர்கள் பார்சல்களை அவற்றை வாங்கியவர்களிடம் ஒப்படைக்க சிரமப்படுவதைக் காணொளியில் பார்க்க முடிகிறது.
நூற்றுக்கணக்கான பார்சல்கள் ஹோட்டலின் முன்தளம், வரவேற்புக் கூடம் (front desk) ஆகியவற்றில் குவிந்து கிடந்ததைக் காணொளி காண்பித்தது. சுற்றுப்பயணக் குழுவைச் சேர்ந்த ஒருவர் பெரிய பையைக் கொண்டு 50 பார்சல்களைத் தனது ஹோட்டல் அறைக்குக் கொண்டு சென்றதும் தெரிந்தது.
ஹோட்டல் ஊழியர்கள் கூடுதல் நேரம் வேலை பார்த்து பார்சல்களை இடமாற்றம் செய்ததாகத் தெரிவிக்கப்பட்டது. இதனால் அவர்கள் சோர்வடைந்தனர். இந்தச் செயல் இணையவாசிகளிடையே கண்டனத்துக்கு உள்ளானது.
ஏற்கெனவே அதிக வேலைப் பளுவை எதிர்நோக்கும் ஹோட்டல் ஊழியர்களுக்கு சுற்றுப்பயணக் குழு, கூடுதல் சுமையை ஏற்படுத்தியதாக இணையவாசிகள் கண்டனம் தெரிவித்தனர்.

