ஜோகூர் பாரு: ஜோகூருக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான இரண்டு நிலவழி சோதனைச்சாவடிகளை அடிக்கடி பயன்படுத்தும் மலேசியப் பயணிகள், ஒற்றைக் குடிநுழைவுச் செயலிக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
மூன்று மாத முன்னோட்டத் திட்டமாக இதுவரை மூன்று குடிநுழைவுச் செயலிகள் சோதனையிடப்பட்டுள்ளன.
அவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து நடைமுறைப்படுத்தினால் சோதனைச்சாவடிகளைப் பயன்படுத்தும் பயணிகளுக்கு எளிதாகவும் வசதியாகவும் இருக்கும் என்று குரல்கள் எழுந்துள்ளன.
ஜூன் மாதத்திலிருந்து இந்த மூன்று செயலிகளையும் 320,000 மலேசியப் பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர்.
தற்போதைய நிலவரப்படி, சுல்தான் அபு பக்கர் சுங்க, குடிநுழைவு சோதனைச்சாவடி - துவாஸ் சோதனைச்சாவடி வழியாகச் செல்லும் மலேசியப் பயணிகள் மைடிரிப் செயலியைப் பயன்படுத்துகின்றனர்.
சுல்தான் இஸ்கந்தர் சோதனைச்சாவடி - உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடி வழியாகச் செல்லும் மலேசியப் பயணிகள் மைரென்டாஸ் செயலியைப் பயன்படுத்துகின்றனர்.
சோதனைச்சாவடிகளைப் பயன்படுத்தும் மலேசிய மோட்டார் சைக்கிளோட்டிகள் மைபார்டர்பாஸ் செயலியைப் பயன்படுத்துகின்றனர்.
முக அடையாளம் அல்லது கியூஆர் குறியீட்டைப் பயன்படுத்த இந்தச் செயலி அனுமதிக்கிறது.
தொடர்புடைய செய்திகள்
இந்த மூன்று செயலிகளில் பெரும்பாலானோர் மைடிரிப் செயலியைப் பயன்படுத்துகின்றனர்.
கிட்டத்தட்ட 190,000 பேர் மைடிரிப் செயலியைப் பயன்படுத்துவதாக மலேசிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
மைபார்டர்பாஸ், மைரென்டாஸ் ஆகிய செயலிகளைத் தலா 65,000 பேர் பயன்படுத்துகின்றனர்.
கியூஆர் குறியீட்டை வருடும் குடிநுழைவு முறை மிகவும் வசதியாக இருப்பதாகவும் குடிநுழைவுப் பணிகளை விரைவில் முடிக்க அது பெரிதும் கைகொடுப்பதாகவும் சுல்தான் அபு பக்கர் சுங்க, குடிநுழைவு சோதனைச்சாவடி - துவாஸ் சோதனைச்சாவடி வழியாகப் பேருந்தில் அடிக்கடி பயணம் செய்யும் கே. சுகுமாரி, 38, தெரிவித்தார்.
“எதிர்காலத்தில் பேருந்துத் தடங்களில் முக அடையாள அணுகுமுறை நடைமுறைப்படுத்தப்பட்டால் குடிநுழைவுப் பணிகள் தற்போதைவிட இன்னும் விரைவாக முடியும்,” என்று கடந்த பத்து ஆண்டுளாகச் சிங்கப்பூரில் பணிபுரியும் திருவாட்டி சுகுமாரி கூறினார்.