ஷா ஆலம்: மலேசியாவின் மாரா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் (யுஐடிஎம்) அதன் இரண்டாவது நானோசேட்டிலைட் (nanosatellite) எனப்படும் சிறிய செயற்கைக்கோளை அனைத்துலக விண்வெளி நிலையத்துக்கு வெற்றிகரமாகப் பாய்ச்சியுள்ளது.
ஜப்பானில் உள்ள தானெகாஷிமா விண்வெளி நிலையத்திலிருந்து மலேசிய நேரப்படி ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 26) காலை எட்டு மணிக்கு அந்த செயற்கைக்கோள் அனைத்துலக விண்வெளி நிலையத்துக்கு ஏவப்பட்டதாக பெர்னாமா போன்ற மலேசிய ஊடகங்கள் தெரிவித்தன. எச்3 எஃப்7 ஏவுகலனில் (H3 F7 rocket) இந்த ‘நானோ’செயற்கைக்கோள் பாய்ச்சப்பட்டது.
இந்நிகழ்வை ஜப்பானின் விண்வெளி ஆய்வு அமைப்பு நேரடியாக ஒளிபரப்பியது.
இந்த நிகழ்வு, மலேசியா மட்டுமின்றி ஆசியான் வட்டாரத்துக்கே ஒரு மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. ஆசியான்சேட் (ASEANSAT) எனும் திட்டத்தின்கீழ் வட்டார அளவில் மேற்கொள்ளப்படும் முதல் செயற்கைக்கோள் திட்டத்தை யுஐடிஎம் வழிநடத்துவது அதற்குக் காரணம்.
பல்வேறு நாடுகளின் பல்கலைக்கழகங்களும் ஈடுபட்டுள்ள ஆசியான்சேட் கூட்டு முயற்சியை யுஐடிஎம் 2021ஆம் ஆண்டிலிருந்து வழிநடத்தி வருகிறது.
அடுத்த ஆண்டு முதல் காலாண்டில் யுஐடிஎம்சேட்-2 (UiTMSAT-2) எனும் ‘நானோ’செயற்கைக்கோள் உலகைச் சுற்றிய பகுதியில் பணியில் ஈடுபடுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக 2018ஆம் ஆண்டில் யுஐடிஎம்சேட்-1 வெற்றிகரமாகப் பாய்ச்சப்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்த ‘நானோ’செயற்கைக்கோள் பாய்ச்சப்பட்டுள்ளது.
யுஐடிஎம்சேட்-2, ஆசியான் வட்டாரப் பல்கலைக்கழகத்தால் வடிவமைத்து, உருவாக்கி, வழிநடத்தும் முதல் ‘நானோ’செயற்கைக்கோளாகும்.
தொடர்புடைய செய்திகள்
யுஐடிஎம்சேட்-1 பாய்ச்சப்பட்டது, உலகளவில் ‘நானோ’செயற்கைக்கோள் ஆய்வில் மலேசியா பங்கேற்பதைச் சித்திரிக்கும் நிகழ்வாக அமைந்தது. யுஐடிஎம்சேட்-2, அனைத்துலக விண்வெளித் திட்டங்களில் முக்கிய வடிவமைப்புகளை மேற்கொள்ளும், முன்னணி வகிக்கும் அமைப்பாகத் தங்களை முன்னிறுத்துவதாக யுஐடிஎம் திங்கட்கிழமை (அக்டோபர் 27) அறிக்கையில் குறிப்பிட்டது.

