பெட்டாலிங் ஜெயா: தெற்குத் தாய்லாந்தில் சனிக்கிழமை இரவு (நவம்பர் 1) துப்பாக்கியால் எட்டு முறை சுடப்பட்ட மலேசியர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
நாரதிவாட் காவல்துறை செய்தித் தொடர்பாளர் ஒருவர், சம்பவ இடத்தில் இருந்த சாட்சிகளிடமிருந்து பெறப்பட்ட தகவலின்படி, இந்தத் தாக்குதல் கடன் தகராறு சம்பந்தப்பட்டதாக இருக்கலாம் என்று கூறினார்.
கிளந்தான் மாநிலத்தின் பாசிர் மாஸ் நகரில் உள்ள கம்போங் கெபாஸ் அப்பாம் வட்டாரத்தைச் சேர்ந்த 33 வயதான ஃபூவாட் ஃபஹ்மி கசாலி என்பவர், மருத்துவ சிகிச்சை பலனின்றி இரவு 9 மணிக்கு உயிரிழந்ததாகச் சினார் ஹரியான் செய்தி ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.
கிளந்தானுக்கு அருகிலுள்ள எல்லை நகரமான சுங்கை கோலோக்கில் உள்ள ஒரு வீட்டில் மாலை 6.40 மணியளவில் இந்தத் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஃபூவாட்டின் தாயாரான 64 வயதான சைத்தோன் அப்துல் ரஹ்மான், தமது மகன் எட்டு முறை சுடப்பட்டதாகக் கேள்வியுற்றதாய்க் கூறினார்.
இந்தச் சம்பவத்தை பெர்னாமா செய்தி நிறுவனத்திடம் கிளந்தான் காவல்துறை தலைவர் யூசோஃப் மாமாட் உறுதிப்படுத்தினார்.
இதற்கிடையே மலேசியா - தாய்லாந்து எல்லையில் அதிகாரிகள் பாதுகாப்பை அதிகரித்து, சோதனைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
எல்லைக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை அதிகரித்திருந்தாலும், ஒரு சில தனிப்பட்டச் சம்பவங்களுக்கு மட்டும் பதில் நடவடிக்கை எடுப்பதில்லை என்றும் உள்நாட்டுப் படை எப்போதும் விழிப்புநிலையில் இருப்பதாகவும் மலேசிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
தொடர்புடைய செய்திகள்
எல்லைப் பாதுகாப்பை நிலைநிறுத்துவதற்கும், பயனுள்ள கட்டுப்பாட்டை உறுதி செய்வதற்கும் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகச் சாலைத் தடுப்புச் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என்றும் மலேசியாவில் அறிவிக்கப்பட்டது.

