சிலாங்கூரிலிருந்து மலாக்கா வரை: சாதிக்க எண்ணி 159 கி.மீ. நடந்த மலேசியர்

சிலாங்கூரிலிருந்து மலாக்கா வரை: சாதிக்க எண்ணி 159 கி.மீ. நடந்த மலேசியர்

2 mins read
db1d1dec-f766-41e3-96ae-98b84a580ce9
தமது நடைப்பயணம் குறித்து மனு ராம் பதிவிட்ட படங்களும் காணொளிகளும் இதுவரை 2.1 மில்லியனுக்கும் மேற்பட்ட முறை பார்க்கப்பட்டுள்ளன. - படம்: எக்ஸ்/மனு ராம்
Google News Preferred Icon

சிலாங்கூர்: சராசரி மனிதனாக இருந்து சலித்துப் போனதால் மலேசியரான மனு ராமுக்கு எதையேனும் சாதிக்க வேண்டும் என்ற உந்துதல் எழுந்தது.

அதற்கு அவர் தேர்ந்தெடுத்த வழி, நடப்பதுதான்!

இம்மாதம் 2ஆம் தேதி காலை 6.37 மணிக்கு சிலாங்கூரின் தாமான்சரா உத்தமாவில் இருக்கும் தம் வீட்டிலிருந்து நடக்கத் தொடங்கிய இவர், 9ஆம் தேதி காலை 8.44 மணிக்கு மலாக்காவின் ஏஃ பாமோசா கோட்டையை அடைந்தார்.

இடைப்பட்ட 170 மணி நேரத்தில் மனு 159 கிலோமீட்டர் தொலைவு நடந்துள்ளார்.

இந்த நடைப்பயணத்திற்காக இவர் ஆயத்தப் பயிற்சி எதுவும் மேற்கொள்ளவில்லை.

தமது நடைப்பயணம் குறித்து லைஃப்ஸ்டைல்டெக் ஊடகத்திடம் மனு பகிர்ந்துகொண்டார்.

“சுருக்கமாகச் சொன்னால், சராசரி மனிதனாக இருந்து சலித்துப் போய்விட்டது. சிறப்பாக ஏதேனும் ஒன்றைச் செய்ய விரும்பினேன். விரிவாகச் சொல்வதெனில், இதற்கு வேறு காரணங்களும் உள்ளன. வேலை கிடைப்பதும் போவதுமாக இருந்தது. வேலைகளுக்கு விண்ணப்பம் செய்வதும் நேர்காணல்களில் பங்குபெறுவதும் தொடர்கதையாகி இருக்கிறது.

“ஆனால், எதுவும் வேலைக்காகவில்லை. எதிலோ சிக்கிக்கொண்டதுபோல, ஊக்கமிழந்து, கிட்டத்தட்ட மதிப்பற்றவனாக உணர்ந்தேன்.

“அதனால், நானாகவே, சாதித்த உணர்வைத் தரக்கூடிய ஒரு செயலைச் செய்ய வேண்டும் என்று எண்ணினேன்,” என்றார் மனு.

இவரது பயணம் அவ்வளவு எளிதானதாக இல்லை. 15 கி.மீ. தொலைவு நடந்ததும் காலணி அறுந்துவிட்டது. அதனைச் செப்பனிட்டபின், தேவையான மற்றப் பொருள்களையும் வாங்கிக்கொண்டு நடையைத் தொடர்ந்தார்.

சில நேரங்களில் கால்களில் கொப்புளம் தோன்றியது; சில நேரங்களில் காரிருளில் நடக்க வேண்டியிருந்தது.

தனது பயணம் குறித்து அவ்வப்போது குடும்பத்தினர்க்கும் நண்பர்களுக்கும் தகவல் தெரிவித்தபடியே இருந்தார்.

அத்துடன், இப்போது எக்ஸ் எனப் பெயர்மாற்றம் பெற்றுள்ள டுவிட்டர் பக்கம் வழியாகப் படங்களையும் காணொளிகளையும் பதிவிட்டு வந்தார். 2.1 மில்லியனுக்கும் மேற்பட்ட முறை அவை பார்க்கப்பட்டுள்ளன.

எதிர்காலத்திலும், பெரும்பாலும் 2024 தொடக்கத்தில் இப்படி மீண்டும் நடைப்பயணம் செல்ல மனு திட்டமிட்டுள்ளார்.

“அடுத்தமுறை பினாங்கிற்கு நடக்கலாம். அல்லது, சிங்கப்பூருக்குச் செல்லலாம். இல்லையேல், மலாக்கா நீரிணையிலிருந்து தென்சீனக் கடலுக்குப் போகலாம்,” என்றார் இவர்.

இப்போதைக்கு, தமது உடல்நிலையை வலுப்படுத்திக்கொள்ளவும் தற்காப்புக் கலைகள் கற்கவும் விரும்பும் இவர், ஒரு வேலையைத் தேடிக்கொள்ளவும் விரும்புகிறார்.

குறிப்புச் சொற்கள்
நடைப்பயணம்மலேசியாசிலாங்கூர்மலாக்கா