மத்திய கிழக்கிலுள்ள மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்: வெளியுறவு அமைச்சு

மத்திய கிழக்கிலுள்ள மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்: வெளியுறவு அமைச்சு

படம்: ஏஎஃப்பி

01 Mar 2026 - 5:27 pm

1 mins read

புத்ராஜெயா: மத்திய கிழக்கில் நிலவிவரும் போர்ப் பதற்றத்தை அணுக்கமாகக் கண்காணித்து வருவதாக மலேசிய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

அங்குள்ள மலேசியர்களின் பாதுகாப்புக்கும் நலனுக்கும் முன்னுரிமை அளிக்கப்படுவதாக அமைச்சு கூறியுள்ளது.

விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டதால் பல்வேறு நாடுகளில் சிக்கியுள்ள மலேசியர்களுக்கு அந்தந்த நாடுகளிலுள்ள மலேசியத் தூதரகங்கள் மூலம் தூதரக உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதுவரை தொடர்புகொண்ட மலேசியர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதை அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. குறிப்பாக, சவூதி அரேபியா, பிரிட்டன், சிரியா, ஜோர்தான், ஐக்கிய அரபுச் சிற்றரசுகள் ஆகிய நாடுகளில் சிக்கியுள்ள மலேசியர்களுடன் தூதரக அதிகாரிகள் தொடர்பில் உள்ளனர்.

வான்வெளி மூடப்படுவதால் ஏற்படும் விமானப் போக்குவரத்து மாற்றங்கள் குறித்து பயணிகள் அந்தந்த விமான நிறுவனங்களுடன் நேரடியாகத் தொடர்புகொண்டு விவரங்களைப் பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், அவசரத் தேவையின்றி அப்பகுதிகளுக்குப் பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்குமாறும் அதிகாரத்துவ தகவல்களை மட்டுமே நம்புமாறும் அமைச்சு அறிவுறுத்தி இருக்கிறது.

பாதிக்கப்பட்டுள்ள வட்டாரங்களில் உள்ள மலேசியர்கள் தங்கள் விவரங்களை ‘இ-கான்சுலர்’ (E-Konsular) இணையத்தளத்தில் பதிவுசெய்யுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர். அவசர உதவிக்கு அமைச்சின் செயல்பாட்டு அறையை +603-8887 4570 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

குறிப்புச் சொற்கள்
மலேசியாமத்திய கிழக்குஈரான்தூதரகம்