காத்மாண்டு: நேப்பாளத்தின் ரசுவா பகுதியை ஒரே இரவில் கவிழ்த்த திடீர் பெருவள்ளத்தில் 500க்கும் அதிகமான வெளிநாட்டினரைக் காணவில்லை என்று அந்நாட்டுக் காவல்துறை தெரிவித்துள்ளது.
காணாமற்போன வெளிநாட்டினரில் அதிகமானோர் திபெத்தின் கைலாய மலைக்குப் புனிதப் பயணம் மேற்கொண்டவர்கள் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே, மலேசியாவைச் சேர்ந்தவர்களின் உற்றார் உறவினர்கள் காணாமற்போனவர்கள் குறித்த தகவல்களைப் பெற சமூக ஊடகங்களின் பக்கம் திரும்பினர்.
மாயமான மலேசியர்களில் 17 பேர் கைலாய மலைக்குப் பயணம் மேற்கொண்டிருந்தனர்.
நேப்பாளத்தைத் தளமாகக் கொண்ட ‘ஃபிஷ்டெயில் டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ்’ என்ற சுற்றுலா நிறுவனம், அந்தப் பயணத்துக்கு ஏற்பாடு செய்ததாகக் காணாமற்போனவர்களின் உறவினர்கள் குறிப்பிட்டனர்.
இம்மாதம் 23ஆம் தேதி நேப்பாளத்தைச் சென்றடைந்த குழு, செப்டம்பர் 5ஆம் தேதிவரை அங்குத் தங்கியிருக்க திட்டமிட்டிருந்ததாகத் தெரிகிறது.
பாதிக்கப்பட்ட மலேசியர்களைக் கண்டறிந்து அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் நோக்கில், உள்ளூர் அதிகாரிகளுடனும் நேப்பாள அரசாங்கம் முடுக்கிவிட்டுள்ள தேடல், மீட்பு நடவடிக்கைக் குழுக்களுடனும் மலேசியத் தூதரகம் தீவிரமாக ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது.
நேப்பாளத்தில் வாழும் அல்லது அங்குப் பயணம் மேற்கொள்ளும் மலேசியர்கள், குறிப்பாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அருகில் உள்ளவர்கள், மிகுந்த விழிப்புடன் இருக்குமாறும் தங்களது பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்து உள்ளூர் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களுக்குக் கீழ்ப்படியுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இந்நிலையில், மாயமானோரில் கிட்டத்தட்ட 100 பேர் சீனாவைச் சேர்ந்தவர்கள் என்று பெய்ஜிங் தெரிவித்தது.
திபெத்தில் உள்ள யீரொங் துறைமுகத்தை உருக்குலைத்த நிலச்சரிவில் மூவர் மாண்டனர் என்றும் 558 பேரை காணவில்லை எனவும் சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்தது. அவர்களில் 260 பேர் வெளிநாட்டினர் என்று அது சொன்னது.
பாதிக்கப்பட்ட இடத்துக்குச் சீனப் பிரதமர் லீ சியாங் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 27) நேரில் சென்றதாகக் கூறிய சின்ஹுவா செய்தி நிறுவனம், அவசரத் தேடல், மீட்புப் பணிகளை மேற்பார்வையிட்டதுடன் மீட்புப் பணியாளர்களையும் பாதிக்கப்பட்டோரையும் அவர் சந்தித்ததாகக் கூறியது.
திபெத்தில் உள்ள சீன அரசாங்க அதிகாரிகள் மீட்புப் பணிகளில் தோள்கொடுக்க மோப்ப நாய்கள், வேகப் படகுகள் ஆகியவற்றுடன் கிட்டத்தட்ட 800 அவசரச் சேவை ஊழியர்களைப் பணியில் முடுக்கிவிட்டுள்ளனர்.
நேப்பாளத்தை மூழ்கடித்த வெள்ளத்தில் ஆஸ்திரேலியா, பிரிட்டன், நெதர்லாந்து, தென்கொரியா, அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களும் காணாமற்போனோரில் அடங்குவர் என்று நேப்பாளச் சுற்றுலா வாரியம் தெரிவித்தது.
இதற்கிடையே, அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கமும் செம்பிறை சமூகங்களும் போர்வைகள், முதலுதவிக் கருவிகள் போன்ற அவசரகாலப் பொருள்களைப் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு வழங்கிவருவதாகத் தெரிவித்தது.
