கோலாலம்பூர்: மலேசியாவில் வசதிகுறைந்தோருக்காக அறிமுகப்படுத்தப்பட்ட மலிவு விலை உணவுத் திட்டம் (மெனு ரஹ்மா), மக்கள் வருமானத்துக்கு உதவும் திட்டங்களின் கீழ் வழங்கப்படும்3 முதல் 5 ரிங்கிட் (சுமார் 1 முதல் 1.60 சிங்கப்பூர் டாலர்) வரை மலிவு விலை உணவுகளைத் தொடர்வதில் உணவகங்கள் சிரமத்தை எதிர்நோக்குகின்றன.
உலகளாவிய எரிசக்தி நெருக்கடி, விநியோகச் சங்கிலி பாதிப்புகளால் மலேசியாவில் உணவுப் பொருள்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. 2023ல் தொடங்கப்பட்ட இந்த மலிவு விலை உணவுத் திட்டத்தில் பங்கேற்ற 15,000 உணவகங்களில், தற்போது 3,141 உணவகங்கள் அவற்றைத் தொடர்கின்றன.
முன்னாள் ஹோட்டல் சமையல்காரரான திரு ஜைனாப் தாலி பெட்ரோனாஸ் இரட்டை கோபுரங்களில் இருந்து 10 நிமிட நடைப்பயண தூரத்தில் உள்ள ஆம்பாங் பார்க் எம்ஆர்டி நிலையத்தில் நிறுவப்பட்டிருக்கும் தானியங்கி இயந்திரத்தில், சோறு, ‘ஸ்பாகெட்டி’ போன்ற வீட்டில் சமைத்த உணவு வகைகளை 3 ரிங்கிட், 5 ரிங்கிட் விலைகளில் விற்கிறார்.
“முன்பு முழுக் கோழித் துண்டுகளை வழங்க முடிந்தது, இப்போது விலை உயர்வால் சிறிய துண்டுகளையே பயன்படுத்த முடிகிறது,” என்றார் அவர்.
ஜைனாப் தாலி போன்ற விற்பனையாளர்கள், அரசாங்கம் வழங்கும் இயந்திர வாடகை மானியம் நிறுத்தப்பட்டால், இந்தச் சேவையைத் தொடர்ந்து நடத்த முடியாது என கவலை தெரிவித்துள்ளனர்.
பல சிறு விற்பனையாளர்கள் சமாளிக்க முடியாததால் அத்திட்டத்திலிருந்து வெளியேறி வருகின்றனர்.
சாலையோரக் கடையில் பர்கர் அல்லது ஒரு தட்டு சோறு உண்பதற்கே 10 முதல் 15 ரிங்கிட் வரை செலவாகிறது.
இந்நிலையில், முன்னாள் பொருளியல் அமைச்சர் ரஃபிஸி ரம்லியால் தொடங்கப்பட்ட ‘கெசும்’ (Kesum) போன்ற சமூக நிறுவனங்கள், 4.90 ரிங்கிட்டிற்கு நாசி லெமாக் வழங்கி வருகின்றன.
தொடர்புடைய செய்திகள்
லாபம் மிகக் குறைவாக இருந்தாலும், சாதாரண மக்களின் தேவையை உணர்ந்து இச்சேவையைத் தொடர்வதாக அவை குறிப்பிட்டன.

