தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூர் ஓட்டுநர் உரிமம் வைத்துள்ள மலேசியர்கள் எரிபொருள் மானியத்திற்கு விண்ணப்பம் செய்யலாம்

2 mins read
af82c693-8f59-4934-9b0b-21b24986b889
‘புடி95’ எரிபொருள் மானியம் கோரி சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் மூன்று அளவுகோல்களின் அடிப்படையில் மதிப்பிடப்படும். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கோலாலம்பூர்: சிங்கப்பூரில் வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றுள்ள மலேசியர்கள் அக்டோபர் 16ஆம் தேதி வியாழக்கிழமைமுதல் ‘புடி95’ (Budi95) எரிபொருள் மானியத்திற்கு விண்ணப்பம் செய்யலாம்.

அதற்கென சாலைப் போக்குவரத்துத் துறைமூலம் மலேசியப் போக்குவரத்து அமைச்சு தனி இணையத்தளத்தை அறிமுகப்படுத்தவுள்ளதாகப் போக்குவரத்து அமைச்சர் லோக் சியூ ஃபூக் தெரிவித்திருக்கிறார்.

“பெறப்படும் விண்ணப்பங்கள் அனைத்தும் மறுஆய்விற்காகவும் தகுதி மதிப்பீட்டிற்காகவும் நிதியமைச்சிடம் சமர்ப்பிக்கப்படும்,” என்று நாடாளுமன்றத்தில் புதன்கிழமை (அக்டோபர் 15) நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது திரு லோக் கூறினார்.

விண்ணப்பங்கள் மூன்று அளவுகோல்களின் அடிப்படையில் பரிசீலனை செய்யப்படும்.

விண்ணப்பதாரர் மலேசியக் குடிமகனாக இருக்க வேண்டும்; செல்லத்தக்க சிங்கப்பூர் உரிமத்தை வைத்திருக்க வேண்டும். அத்துடன், சிங்கப்பூரில் அவரது வேலை அனுமதித் தகுதிநிலையும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

சிங்கப்பூர் வழங்கியுள்ள ஓட்டுநர் உரிமத்தைப் பயன்படுத்த வேண்டிய மலேசியர்கள், குறிப்பாக பேருந்து ஓட்டுநர்கள், பாதுகாப்புப் பணியாளர்கள் உள்ளிட்டோர்க்கு உதவ இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் லோக் குறிப்பிட்டார்.

www.Budi95lesenSG.jpj.gov.my எனும் இணையத்தளம் வாயிலாக புடி95 எரிபொருள் மானியத்திற்கு விண்ணப்பம் செய்யலாம். அவ்வாறு விண்ணப்பம் செய்தோர் தாங்கள் ‘புடி95’ எரிபொருள் மானியம் பெற தகுதியானவர்களா என்பதை 14 நாள்களுக்குப் பிறகு www.Budi95.gov.my எனும் இணையத்தளம் வழியாக அறிந்துகொள்ளலாம்.

இருப்பினும், மலேசியாவில் பதிவுசெய்யப்பட்ட வாகனங்களுக்கு மட்டுமே புடி95 எரிபொருள் மானியம் வழங்கப்படும் என்பதைத் திரு லோக் வலியுறுத்திக் கூறினார்.

சிங்கப்பூரில் வேலை செய்யாத மலேசியர்கள், அந்நாட்டு ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்துவிட்டு, உரிய நடைமுறைகளின்கீழ் மீண்டும் மலேசிய ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பம் செய்யலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்