கோத்தா பாரு: தாய்லாந்தின் தெற்குப் பகுதியில் உள்ள மூன்று மாநிலங்களில் அடுத்தடுத்து ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களில் மலேசியர்கள் யாரும் பாதிக்கப்பட்டதாகத் தகவல் இல்லை என்று கிளந்தான் காவல்துறைத் தலைவர் முகம்மது யூசோஃப் மாமார் கூறியுள்ளார்.
அண்மைய பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக மலேசியர்கள் முன்னெச்சரிக்கையுடன் நடந்துகொண்டு கூடுமானவரை பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குப் பயணம் செய்வதைத் தவிர்க்கும்படி செய்தியாளர் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.
இந்த அறிவுரை புதிதல்ல என்ற திரு முகம்மது யூசோஃப், தென் தாய்லாந்துக்குப் பயணம் மேற்கொள்ளும் மலேசியர்களிடம் பலமுறை அதுகுறித்து கூறியிருப்பதைச் சுட்டினார்.
கிளந்தானில் டுகார்டி ரக மோட்டார்சைக்கிள்களை ஓட்டும் குழுவிற்கும் அதே அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் இன்று ஹாட் யாய் உட்பட தாய்லாந்திற்குள் செல்லத் திட்டமிட்டுள்ளதாகவும் முகம்மது யூசோஃப் சொன்னார்.
“தெற்கு தாய்லாந்தின் மூன்று மாநிலங்களில் நேற்றிரவு 51 அசம்பாவிதங்கள் நடந்ததால் அவர்களை ஹாட் யாய்க்குள் செல்லவேண்டாம் என்று நான் அறிவுறுத்தினேன்,” என்று மேலும் அவர் குறிப்பிட்டார்.
அண்டை நாட்டிற்குச் செல்லவேண்டிய மலேசியர்கள் தற்போதைய பாதுகாப்புச் சூழலைக் கருத்தில் கொண்டு அங்குத் தங்கியிருக்கும்போது எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என்றும் முகம்மது யூசோஃப் அறிவுறுத்தினார்.
மலேசியர்கள் தாய்லாந்திற்குப் பயணம் செய்ய தடை விதிக்கவில்லை என்ற சூழலில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வலியுறுத்தும் வெளியுறவு அமைச்சின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப அந்த அறிவுரை வழங்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
தாய்லாந்தின் மூன்று மாநிலங்களில் குண்டுவெடிப்புகள், உள்ளூர் அரசு அலுவலகங்களுக்குத் தீவைப்பு, வாகனத்தின் சக்கரங்களை எரித்தல் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட சம்பவங்கள் அண்மையில் பதிவாகின.
இதற்கிடையே, நாட்டின் விதிமுறைகளுக்கு இணங்கத் தவறும் மலேசிய வாகனங்களுக்கு எதிராக அமலாக்க நடவடிக்கைகளைத் தாய்லாந்து அதிகாரிகள் தீவிரப்படுத்தி வருவதாகத் தெரியவந்திருப்பதை முகம்மது யூசோஃப் பகிர்ந்துகொண்டார்.
தாய்லாந்தில் வாகனம் ஓட்டும் மலேசியர்கள், அந்நாட்டின் போக்குவரத்து விதிகளை மதித்து நடக்கும்படி அறிவுறுத்தப்பட்டனர்.


