புத்ராஜெயா: மியன்மாரின் மியாவாடி பகுதியில் இணைய மோசடிக் கும்பலிடம் சிக்கிக்கொண்ட 31 மலேசியர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுத் தாய்நாடு திரும்பியுள்ளதாகச் சினார் ஹரியான் நாளேடு தெரிவித்துள்ளது.
பேங்காக்கிலும் யங்கூனிலும் உள்ள மலேசியத் தூதரகங்கள் மூலம் அந்த 31 குடிமக்களும் நாடு திரும்பியதாக வெளியுறவு அமைச்சு குறிப்பிட்டதாய் விஸ்மா புத்ரா மலாய் நாளேடு சொன்னது.
சனிக்கிழமை (டிசம்பர் 20) கெடாவில் உள்ள புக்கிட் காயு ஹித்தாம் குடிநுழைவுச் சோதனைச் சாவடிகளில் மாலை 6.50 மணியளவில் வந்திறங்கிய மலேசியர்கள் மலேசியக் காவல்துறையிடம் கூடுதல் விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டனர்.
பேங்காக்கில் உள்ள மலேசியத் தூதரகம் இம்மாதத் தொடக்கத்தில் மோசடிக் கும்பலிடம் சிக்கிய மலேசியர்களின் அடையாளங்களை உறுதிப்படுத்தியது. சட்டவிரோதமாக நாட்டுக்குள் நுழைந்ததாக நம்பப்படும் அவர்களை உள்நாட்டு குடிநுழைவுச் சட்டத்தின்கீழ் உடனடியாகத் தாய்நாட்டுக்குத் திருப்பி அனுப்ப முடியவில்லை என்று விஸ்மா புத்ரா நாளேடு குறிப்பிட்டது.
ஆனால், பேங்காக்கில் உள்ள மலேசியத் தூதரகம், டக் குடிநுழைவு அதிகாரிகள் ஆகியவற்றின் முயற்சியாலும் சமரசப் பேச்சாலும் தாய்லாந்தின் தேசியப் பரிந்துரை அமைப்பின்கீழ் மலேசியர்கள் விடுவிக்கப்பட்டனர்.
மியன்மார்- தாய்லாந்து எல்லையில் சிக்கியுள்ளோரைக் கொண்டுவர குறைந்தது இரண்டு வாரங்கள் தேவைப்படும் என்று மலேசிய வெளியுறவு அமைச்சர் முகமது ஹசான் இதற்குமுன் கூறியிருந்தார்.
தாய்லாந்தில் அவர்கள் சட்டவிரோதமாக நுழைந்ததால் நீடித்த தற்காலிக தடுப்புக் காவல், நீதிமன்ற நடவடிக்கைகள், அபராதங்கள் ஆகியவற்றால் அந்தத் தாமதம் ஏற்படலாம் என்று அவர் விளக்கம் அளித்தார்.
மலேசியர்கள் விடுவிக்கப்பட்டதை அடுத்து அவர்களுக்கு விரிவான தூதரக உதவி வழங்கப்பட்டதாக விஸ்மா புத்ரா நாளேடு குறிப்பிட்டது.
தொடர்புடைய செய்திகள்
சிக்கியோரின் குடும்பங்களுக்குத் தகவல் அளிக்கப்பட்டதுடன் தற்காலிகப் பயண ஆவணங்கள் வழங்கப்பட்டன, தளவாடங்கள் ஒருங்கிணைக்கப்பட்டன, அடிப்படைத் தேவைகள் பூர்த்திசெய்யப்பட்டன.
டாக் மாநிலத்திலிருந்து புக்கிட் காயு ஹித்தாம் வரையிலான 26 மணி நேர பயணத்தின்போதும் அவர்களுடன் அதிகாரிகள் துணை இருந்தனர்.
மலேசிய உள்துறை அமைச்சர், மலேசிய குடிநுழைவுத் துறை, மலேசிய எல்லைக் கட்டுப்பாட்டு அமைப்பு, பேங்காக்கிலும் யங்கூனிலும் உள்ள மலேசியத் தூதரகங்கள், சொங்லாவில் உள்ள மலேசியத் துணைத் தூதரகம் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த முயற்சியால்தான் மலேசியர்கள் பாதுகாப்பாகக் கொண்டு வரப்பட்டனர் என்று அதிகாரிகள் கூறினர்.

