பெட்டாலிங் ஜெயா: கடந்த 2025ஆம் ஆண்டில் மலேசியாவில் உறுதிசெய்யப்பட்ட முதலீடுகள் வரலாறு காணாத அளவில் S$137.94 பில்லியனை (426.7 பில்லியன் ரிங்கிட்) எட்டியுள்ளது என்று பிரதமர் அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.
அந்தத் தொகை, கடந்த 2024ஆம் ஆண்டில் பதிவானதைவிட 11 விழுக்காடு அதிகம் என்பதையும் அவர் குறிப்பிட்டார். உறுதிசெய்யப்பட்டுள்ள 8,390 முதலீடுகளின் வழியாக 244,902 புதிய வேலைகள் உருவாக்கப்படும் வாய்ப்புள்ளதையும் திரு அன்வார் சுட்டினார்.
மலேசிய வரலாற்றில் இதுவே ஆக அதிக அளவிலான முதலீடு என்று அவர் ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.
நிதி அமைச்சருமான திரு அன்வார், உள்நாட்டு முதலீடு S$70.99 பில்லியன் (RM219.6 பில்லியன் ரிங்கிட்) என்று கூறினார். அது மொத்த முதலீடுகளில் 51.5 விழுக்காடு என்றும் விவரித்தார்.
வெளிநாட்டு முதலீடுகள் 20.9 விழுக்காடு ஏற்றம் கண்டுள்ளதையும் அவர் எடுத்துரைத்தார். அதன் மதிப்பு S$67.14 பில்லியன் (RM207.1 பில்லியன்) ஆகும். இவையனைத்தும் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் உள்ள முதலீட்டாளர்கள் மலேசியாவின் நிலைத்தன்மை, கொள்கைகள், பொருளியல் முன்னெடுப்புகள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையைக் காட்டுகிறது என்று அவர் பெருமிதம் அடைந்தார்.
“இந்த முதலீடுகள் ஒவ்வொன்றும் உறுதிசெய்யப்பட்டு வேலை வாய்ப்புகளும் தொழில்நுட்ப வளர்ச்சியும் மக்களிடையே வளப்பமும் பெருகுவதை வர்த்தகத் தொழில்துறை அமைச்சு, மலேசிய முதலீட்டு மேம்பாட்டு ஆணையம் ஆகியன உறுதிசெய்யும்,” என்றும் பிரதமர் அன்வார் கூறினார்.
“இந்த விவரங்கள் வெறும் எண்கள் அல்ல. மலேசியாவின் மறுசீரமைப்பை மேற்கொண்டுவரும் எங்கள்மீதும் நாட்டின்மீதும் வைக்கப்பட்டுள்ள உலகளாவிய நம்பிக்கையின் சாட்சியங்கள். மலேசியர்கள் அவற்றின் பலன்களை அனுபவிப்பதற்காக நாங்கள் தொடர்ந்து பணியாற்றுவோம்,” என்றார் பிரதமர் அன்வார்.

