‘இதுவே மலேசியாவின் அழகு’: தீபாவளி வாழ்த்தில் நல்லிணக்கத்திற்கு அழைப்பு விடுத்தார் அன்வார்

‘இதுவே மலேசியாவின் அழகு’: தீபாவளி வாழ்த்தில் நல்லிணக்கத்திற்கு அழைப்பு விடுத்தார் அன்வார்

படம்: பெர்னாமா

06 Nov 2026 - 2:07 pm

1 mins read

கோலாலம்பூர்: தீபாவளிப் பண்டிகையை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டு, பல இன, பல சமயங்களைக் கொண்ட மலேசியச் சமூகத்தில் நற்பண்புகள், பரஸ்பர மரியாதை, நல்லிணக்கத்தை மேலும் வளர்க்குமாறு மலேசியர்கள் அனைவரையும் பிரதமர் அன்வார் இப்ராகிம் கேட்டுக்கொண்டுள்ளார்.

வெள்ளிக்கிழமை (நவம்பர் 6), தமது ஃபேஸ்புக் பதிவில் கருத்து தெரிவித்துள்ள திரு அன்வார், கலாசார, சமய ரீதியான பன்முகத்தன்மை இருந்தாலும், மக்கள் அனைவரும் அன்பு, புரிதல், அமைதியுடனும் நல்லிணக்கத்துடனும் இணைந்து வாழும் விருப்பம் ஆகிய பொதுவான விழுமியங்களையே கொண்டுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

“இதுவே மலேசியாவின் அழகு. இதனை நாம் தொடர்ந்து பாதுகாக்க வேண்டும். தீபாவளியைக் கொண்டாடும் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்,” என்று அவர் கூறினார்.

மேலும், வியாழக்கிழமை (நவம்பர் 5) பிரிக்ஃபீல்ட்சில் நடைபெற்ற ‘2026 தீபாவளிப் பெருஞ்சந்தை’க்கு அவர் சென்றதை விவரிக்கும், இரண்டு நிமிடம் 12 நொடி கொண்ட காணொளி ஒன்றையும் பிரதமர் அன்வார் பதிவேற்றியுள்ளார் என்று பெர்னாமா செய்தி தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்
பன்முகத்தன்மைதீபாவளிஅன்வார்