பெட்டாலிங் ஜெயா: மலேசியாவின் முன்னாள் பிரதமர் மகாதீர் முகம்மது தனது இல்லத்தில் கீழே விழுந்ததில் அவருக்கு இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, கோலாலம்பூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
செவ்வாய்க்கிழமை (ஜனவரி 6) காலை 9.30 மணியளவில் தவறுதலாகக் கீழே விழுந்த அவரைத் தேசிய இதயக் கழக (ஐஜேஎன்) மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாக மலேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தத் தகவலை டாக்டர் மகாதீர் தரப்பிலிருந்து அவரது பேச்சாளர் சுஃபி யூசோஃப் உறுதிப்படுத்தியுள்ளார்.
டாக்டர் மகாதீர் சுயநினைவுடன் இருந்தார் என்று குறிப்பிட்ட திரு சுஃபி, தற்போது அவர் விரிவான மருத்துவக் கண்காணிப்பில் உள்ளதாக மேலும் சொன்னார். சிகிச்சை தொடர்கிறது.
டாக்டர் மகாதீர் விரைவில் குணமடைய தாமும் தம் மனைவி வான் அஸிஸா வான் இஸ்மாயிலும் பிரார்த்திப்பதாக மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் ஃபேஸ்புக்கில் பதிவிட்டார்.
1925 ஜூலை 10ஆம் தேதி பிறந்த டாக்டர் மகாதீர், மலேசியாவின் நாலாவது மற்றும் ஏழாவது பிரதமராகப் பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 2025 ஜூலையில் அவர் தமது 100வது பிறந்தநாளைக் கொண்டாடினார்.

