கோலாலம்பூர்: உலகளாவிய செயற்கை நுண்ணறிவு முதலீட்டுப் பெருவளர்ச்சி மற்றும் மின்சார, மின்னணுப் பொருள்களுக்கான வலுவான தேவை ஆகியவற்றால் உந்தப்பட்டு, 2026ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களில் மலேசியாவின் ஏற்றுமதி ஆண்டுக்கு ஆண்டு 37.1 விழுக்காடு உயர்ந்து 1.81 டிரில்லியன் ரிங்கிட் என்ற சாதனை அளவை எட்டியுள்ளது.
1990ஆம் ஆண்டிற்குப் பிறகு ஜனவரி முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் பதிவான மிக வலுவான வளர்ச்சியாக இது அமைந்துள்ளது. இதன் மூலம் நாட்டின் வர்த்தக உபரி 274.81 பில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்துள்ளது. 1990ஆம் ஆண்டிற்குப் பிறகு எந்தவொரு முழு ஆண்டிலும் பதிவான அதிகபட்ச வர்த்தக உபரியை இது இப்போதே விஞ்சிவிட்டதாக மலேசிய வெளிநாட்டு வர்த்தக மேம்பாட்டுக் கழகம் தெரிவித்துள்ளது.
இந்தச் சாதனைப் புள்ளிவிவரங்களுக்கு அப்பால், அனைத்துலகச் சந்தைகளில் தங்களது இருப்பை விரிவுபடுத்தி, பாரம்பரிய ஏற்றுமதித் தொழில்களைத் தாண்டிப் பன்முகப்படுத்தி வரும் மலேசியாவின் சிறிய, நடுத்தர நிறுவனங்களின் வளர்ந்து வரும் பங்களிப்பையும் இந்தச் செயல்திறன் எடுத்துக்காட்டுகிறது.
பகுதிமின்கடத்திகள், செயற்கை நுண்ணறிவு ஆகியவை தொடர்பான உள்கட்டமைப்பு வசதிகளுக்கான தேவை அதிகரித்து வரும் சூழலில், உலகளாவிய தொழில்நுட்ப விநியோகச் சங்கிலிகளில் மலேசியாவின் முக்கிய இடத்தைப் பிரதிபலிக்கும் வகையில், மின்சார, மின்னணுப் பொருள்களின் ஏற்றுமதி 53.9 விழுக்காடு அதிகரித்து 891.99 பில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்துள்ளது.
மின்சார, மின்னணு சாராத பொருள்களின் ஏற்றுமதியும் வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன. அவை 24 விழுக்காடு உயர்ந்து 919.17 பில்லியன் ரிங்கிட்டை எட்டியதுடன், 74.03 பில்லியன் ரிங்கிட் வர்த்தக உபரியையும் ஈட்டியுள்ளன.
மலேசிய வெளிநாட்டு வர்த்தக மேம்பாட்டுக் கழகத்தின் அனைத்துலக வர்த்தகத் திட்டங்களில் பங்கேற்ற சிறிய, நடுத்தர நிறுவனங்களில், 7,434 நிறுவனங்கள் ஒன்றிணைந்து 63.60 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான ஏற்றுமதியை மேற்கொண்டுள்ளன. மேலும், இவை 383,000க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளுக்கு ஆதரவளித்ததுடன், 12.04 பில்லியன் ரிங்கிட் வர்த்தக உபரியையும் பதிவு செய்துள்ளன.
