கோலாலம்பூர்: உலகளாவிய எரிசக்தி நெருக்கடியின் தாக்கத்தை விட, குடும்பங்களின் மீள்திறன் மிக்க செலவினங்களும் செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியும் அதிகரித்ததால், மலேசியாவின் பொருளியல் முதலாம் காலாண்டில், ஆரம்பத்தில் மதிப்பிடப்பட்டதைவிட வேகமாக வளர்ந்துள்ளது.
கடந்த மாதம் முன்கூட்டியே வெளியிடப்பட்ட 5.3 விழுக்காடு மதிப்பீட்டை விஞ்சி, மொத்த உள்நாட்டு உற்பத்தி, முந்தைய ஆண்டை விட 5.4 விழுக்காடு உயர்ந்துள்ளதாக பேங்க் நெகாரா மலேசியா எனும் மத்திய வங்கி, மலேசியப் புள்ளிவிவரத் துறை ஆகியவை வெள்ளிக்கிழமையன்று (மே 15) தெரிவித்துள்ளன.
பொருளியல் வல்லுநர்களின் சராசரிக் கணிப்பு, இதில் எந்த மாற்றமும் இருக்காது என்பதாக இருந்தது. 2025ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டு வளர்ச்சி 6.3 விழுக்காட்டிலிருந்து 6.2 விழுக்காடாகக் குறைக்கப்பட்டுள்ளது.
“உயர்ந்த எரிசக்தி விலைகள், விநியோகச் சங்கிலித் தடைகள், அதிகரித்த நிச்சயமற்ற தன்மை ஆகியவை வெளிப்புறச் சூழலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது,” என்று பேங்க் நெகாரா மலேசியாவின் ஆளுநர் அப்துல் ரஷீத் கஃபூர் ஒரு செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
“இருப்பினும், நிலையான உள்நாட்டுத் தேவை மற்றும் நமது ஏற்றுமதிச் செயல்திறனில் தொடர்ச்சியான விரிவாக்கம் ஆகியவற்றின் ஆதரவுடன், மலேசியப் பொருளியல், 2026ஆம் ஆண்டில் 4 முதல் 5 விழுக்காடு வளர்ச்சியோடு மீள்திறனுடன் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது,” என்று அவர் தெரிவித்தார்.
தற்போதைய அடிப்படை வட்டி விகிதம் பொருத்தமானது என்றும், மாறிவரும் சூழல்களுக்கு ஏற்ப மத்திய வங்கி தொடர்ந்து விழிப்புடன் இருக்கும் என்றும் திரு ரஷீத் கூறினார். கடந்த வாரம், மலேசியாவின் அடிப்படைக் காரணிகள் ஈரான் போரை எதிர்கொள்ளும் திறனை வலுப்படுத்தும் என்றும் பணவீக்கத்தின் மீதான தாக்கம் கட்டுக்குள் இருக்கும் என்றும் கூறி, மத்திய வங்கி முக்கிய வட்டி விகிதத்தை 2.75 விழுக்காடாகத் தக்கவைத்துக் கொண்டது.
மலேசியப் பயனீட்டாளர்கள் 2026ஆம் ஆண்டிலும் தொடர்ந்து செலவு செய்து வருகின்றனர். மேலும், செயற்கை நுண்ணறிவு தொடர்பான மின்னணுவியல் மற்றும் சேவைகளுக்கான நீடித்த உலகளாவிய மோகத்தால் ஊக்கம் பெற்ற சிங்கப்பூர், தைவான் உள்ளிட்ட ஒரு சில ஆசியப் பொருளியல்களில் மலேசியாவும் ஒன்றாகும்.
இது, ஈரான் மீதான அமெரிக்கப் போரை எதிர்கொள்ள நாட்டிற்கு ஒரு முக்கியப் பாதுகாப்பை வழங்கியுள்ளது. அதே நேரத்தில், பிலிப்பீன்ஸ் போன்ற அண்டை நாடுகள், எண்ணெய் விநியோகத் தடைகள் காரணமாக அதிக விலைகளுடனும் மந்தமான பொருளியல் செயல்பாடுகளுடனும் போராடி வருகின்றன என்று புளூம்பெர்க் தெரிவித்தது.

