பத்துமலை: தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு மலேசியாவின் உலகப் புகழ்பெற்ற பத்துமலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அலைகடலெனத் திரண்டனர்.
அலகுக் காவடி, பால் காவடி எனப் பல்வகை காவடிகளைச் சுமந்து மலை ஏறி தங்கள் நேர்த்திக்கடன்களை அவர்கள் நிறைவேற்றினர்.
முருகப் பெருமானைத் துதிக்கும் பாடல்கள் முழங்க, பக்தர்கள் காவடிகளைச் சுமந்துகொண்டு 272 படிகளில் ஏறி பத்துமலை முருகன் கோயிலை அடைந்து முருகப்பெருமானை வழிபட்டனர்.
மலேசியத் தலைநகர் கோலாலம்பூரின் புறநகர்ப் பகுதியில் உள்ள பத்துமலையில் நூறாண்டுக்கு மேலாகத் தைப்பூசத் திருவிழா மிக விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது.
தமிழ் இந்துக்களுக்கு மிக முக்கியமான சமய நிகழ்வுகளில் தைப்பூசமும் ஒன்று.
தைப்பூசத் திருவிழாவுக்கு உலகெங்கும் உள்ள தமிழ் இந்துக்கள் மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.
ஆண்டுதோறும் தைப்பூசத் திருவிழாவின்போது இந்தியா, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் பக்தர்கள் பலர் காவடி ஏந்தி நேர்த்திக்கடன்களை நிறைவேற்றுகின்றனர்.
அசுர வதத்துக்காக முருகப் பெருமானுக்கு வேலாயுதத்தை அன்னை பார்வதி தந்தருளிய நாளே தைப்பூசமாக அனுசரிக்கப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
“முருகப் பெருமானைத் தினமும் வழிபடுகிறோம். வேண்டுதல் நிறைவேறியதும் முருகப் பெருமானுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தைப்பூசத் திருவிழாவின்போது காவடி ஏந்தி நேர்த்திக்கடன்களை நிறைவேற்றுகிறோம்,” என்று மூத்த தாதியராகப் பணிபுரியும் 45 வயது திருவாட்டி ரேவதி ராமசுந்தரா கூறினார்.
“என் பிள்ளைகள் கல்வியில் தேர்ச்சி பெற வேண்டும் என்றும் தொழில் லாபகரமானதாக இருக்க வேண்டும் என்றும் இவ்வாண்டு வேண்டிக்கொண்டேன்,” என்று வர்த்தகரான மகேந்திரன் மாசிலாமணி ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.