கோலாலம்பூர்: மலேசியாவின் பணவீக்கம் ஜனவரி 2026ல் 1.6 விழுக்காடு அதிகரித்துள்ளது. அதன் குறியீட்டுப் புள்ளிகள் கடந்த ஆண்டு இதே மாதத்தில் 133.6 ஆக இருந்தது. இப்போது அது 135.7ஆக உயர்ந்துள்ளதாக மலேசிய புள்ளிவிவரத் துறை தெரிவித்துள்ளது.
வியாழக்கிழமை (பிப்ரவரி 19) ஓர் அறிக்கையில், தலைமைப் புள்ளிவிவர நிபுணர் டாக்டர் முகமது உசிர் மஹிடின் கூறுகையில், “இது, தனிப்பட்ட பராமரிப்பு, சமூகப் பாதுகாப்பு மற்றும் இதர பொருள்கள், சேவைகள் ஆகிய நான்கு துறைகளில் அதிகரித்துள்ளது. இது, 2025 டிசம்பரில் 5.7 விழுக்காட்டுடன் ஒப்பிடும்போது, ஆண்டுக்கு ஆண்டு 6.6 விழுக்காடு அதிகரித்துள்ளது,” என்றார்.
இதைத் தொடர்ந்து கல்வி 3.2 விழுக்காடு (டிசம்பர் 2025: 2.8 விழுக்காடு), வீடமைப்பு, நீர், மின்சாரம், எரிவாயு மற்றும் பிற எரிபொருள்கள் 1.2 விழுக்காடு (டிசம்பர் 2025: 0.9 விழுக்காடு) மற்றும் பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாசாரம் 0.9 விழுக்காடு (டிசம்பர் 2025: 0.8 விழுக்காடு) அதிகரித்துள்ளது.
மதுபானங்கள் மற்றும் புகையிலை (2.5 விழுக்காடு), உணவு, பானத் துறையும் (1.5 விழுக்காடு) முந்தைய மாதத்தைப் போலவே அதிகரித்துள்ளன என்று அவர் மேலும் கூறினார்.
புள்ளி விவரத்துறையின்படி, சுமார் 62 விழுக்காட்டு பொருள்கள் (573ல் 355) விலை உயர்வைப் பதிவு செய்தன. அவற்றில் 346 பொருள்கள் (97.5 விழுக்காடு) 10 விழுக்காடு அல்லது அதற்கும் குறைவாக உயர்ந்தன.
ஜனவரியில் ஜோகூர் (2.1 விழுக்காடு), நெகிரி செம்பிலான் (2.0 விழுக்காடு) மற்றும் பாகாங் (1.9 விழுக்காடு) ஆகிய மாநிலங்களின் பணவீக்கம் தேசிய பணவீக்க அளவைவிட (1.6 விழுக்காடு) அதிகரித்தது.
இருப்பினும், மற்ற மாநிலங்களில் பணவீக்கம் தேசிய விகிதத்தை விடக் குறைவாகவும் சமமாகவும் இருந்தது. கிளந்தான் மிகக் குறைந்த பணவீக்கத்தை (0.3 விழுக்காடு) பதிவு செய்ததாக திரு முகமது உசிர் கூறினார். மற்ற எல்லா மாநிலங்களும் உணவு, பானங்களுக்கான அதிக பணவீக்க விகிதங்களைப் பதிவு செய்துள்ளதாகவும், நான்கு மாநிலங்களும் கூட்டரசு பிரதேசமும் தேசிய உணவு, பான பணவீக்கத்தை (1.5 விழுக்காடு) விட அதிகரித்தாகவும் அவர் கூறினார்.

