மலேசியாவில் புதிய ரயில் சேவை ஒத்திகை

மலேசியாவில் புதிய ரயில் சேவை ஒத்திகை

2 mins read
e21a91e4-dfc0-41b1-9ee5-5c45f76d1b49
665 கிலோமீட்டர் தூரத்திற்கான ரயில் பாதை, தலைநகர் கோலாலம்பூருடன் குவந்தான், கோத்தா திரங்கானு, கோத்தா பாரு போன்ற கடற்கரை நகரங்களை இணைக்கும். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

நீண்டகாலமாக எதிர்பார்க்கப்படும் மலேசியாவின் ஈஸ்ட் கோஸ்ட் ரயில் இணைப்பு (ECRL) சேவையின் ஒத்திகை புதன்கிழமை (பிப்ரவரி 11) நடைபெற்றது.

சீனாவிலிருந்து அண்மையில் வந்து சேர்ந்த ரயில்களைப் பயன்படுத்தி, கிட்டத்தட்ட 20 கிலோமீட்டர் சுற்றுப்பாதையில் அந்த ஒத்திகை நடத்தப்பட்டது.

பாகாங் மாநிலத் தலைநகர் குவந்தானில் நிகழ்ந்த ரயில் சேவை ஒத்திகை நிகழ்வில் மலேசியப் போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி லோக் கலந்துகொண்டார்.

இசிஆர்எல் ரயில் சேவை அடுத்த ஆண்டு அதிகாரபூர்வமாகத் தனது பயணச் சேவையைத் தொடங்கும் என்றும் அதனை நோக்கி அந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றும் கூறப்பட்டது.

தலைநகர் கோலாலம்பூரில் தொடங்கி குவந்தான், கோலா திரங்கானு, கோத்தா பாரு ஆகிய கிழக்குக் கடற்கரை நகரங்களின் வழியாக அந்த ரயில் சேவை இயங்கும். அதன் மொத்த பயண தூரம் 665 கிலோமீட்டர். மலேசியத் தீவின் இருபாதிகளை அந்தச் சேவை இணைக்கும்.

ரயில் சேவை உருவாக்கப் பணிகள் 92 விழுக்காடு நிறைவடைந்துள்ளதாக திரு லோக் தெரிவித்தார்.

“இன்னும் ஏறக்குறைய 11 மாதங்களில் கோம்பாக்கிலிருந்து கோத்தா பாரு வரையிலான புதிய ரயில் சேவையை நாம் எதிர்பார்க்கலாம். நமது போக்குவரத்து முறையில் இது ஒரு முக்கிய மைல்கல்,” என்றார் அவர்.

ஒத்திகை நிகழ்வில் திரு லோக்குடன் தொடர்புத்துறை அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்ஸில், சீனத் தூதர் ஓயுங் யுயிங் ஆகியோரும் பங்கேற்றனர்.

ரயில் சேவைக்கான செலவு 50.27 பில்லியன் ரிங்கிட் (S$16.2 பில்லியன்) என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் புதிய விரிவான ரயில் சேவை மூலம் அடுத்த 20 ஆண்டுகளில் மலேசியப் பொருளியல் 3.8 விழுக்காடு வளர்ச்சி காணும் என மலேசிய அரசாங்கம் கருதுகிறது.

குறிப்புச் சொற்கள்