தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

எல் சல்வடோரிடம் ஒப்படைக்கப்பட்டவர் பாதுகாப்பாக இருக்கிறார்: அமெரிக்க வெளியுறவு அமைச்சு

2 mins read
8aca5ce3-e83a-4dc8-94cc-1c4d0875d2e3
கில்மர் அப்ரெகோ கார்சியா. - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

வாஷிங்டன்: எல் சல்வடோரிடம் ஒப்படைக்கப்பட்ட மேரிலேண்ட்வாசி, ‘உயிருடனும் பாதுகாப்பாகவும்’ இருப்பதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சு சனிக்கிழமை (ஏப்ரல் 12) தெரிவித்துள்ளது.

கில்மர் அப்ரெகோ கார்சியா எல் சல்வடோரில் அமைந்துள்ள, பயங்கரவாதக் குற்றவாளிகளுக்கான பாதுகாப்பு மிக்க சிறைச்சாலையில் இருப்பதாக அது கூறியது.

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் நிர்வாகம் அந்த ஆடவரை மீண்டும் அமெரிக்காவிற்குக் கொண்டுவருவதற்கு மேற்கொள்ளும் முயற்சி குறித்து அந்நாட்டு நீதிபதி ஒருவர் தகவல் கோரியதை அடுத்து அமைச்சு இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.

ஆடவரைத் திருப்பிக் கொண்டுவருவது தொடர்பான முயற்சியில் ஆக அண்மைய தகவல்களை அன்றாடம் சமர்ப்பிக்கும்படி மாவட்ட நீதிபதி கடந்த வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார்.

ஆடவர் பாதுகாப்பாக இருப்பதாகக் கூறிய வெளியுறவு அமைச்சு அவரை அமெரிக்கா கொண்டுவருவது குறித்து அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து விவரிக்கவில்லை.

அப்ரெகோ கார்சியா மேரிலேண்டில் வசித்தவர் என்பதையும் 2019ஆம் ஆண்டு முதல் வேலை அனுமதியின் பேரில் அமெரிக்காவில் வசித்த அவர் தவறுதலாக நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டதையும் டிரம்ப் நிர்வாகம் ஒப்புக்கொண்டது.

அந்த ஆடவர், மார்ச் 15ஆம் தேதி, எல் சல்வடோருக்கு அனுப்பப்பட்டார். அவரை அமெரிக்காவிலிருந்து வெளியேற்றக் கூடாது என முன்னர் உத்தரவிடப்பட்டிருந்தது.

இதற்கிடையே, அதிபர் டிரம்ப் திங்கட்கிழமை எல் சல்வடோர் அதிபர் நயிப் புக்கெலேவை வெள்ளை மாளிகையில் சந்திக்கவிருப்பதாகத் தகவல் வெளியானது.

சனிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய திரு டிரம்ப், அதிபர் புக்கெலேவைச் சந்திக்கத் தாம் ஆர்வமாக இருப்பதாகவும் அமெரிக்காவும் எல் சல்வடோரும் பயங்கரவாத அமைப்புகளைத் துடைத்தொழிப்பதில் அணுக்கமாக ஒத்துழைப்பதாகவும் கூறினார்.

குறிப்புச் சொற்கள்