பேங்காக்: தாய்லாந்தில் 36 வயது ஆடவர் ஒருவர், வெறிநாய்க்கடி நோயால் உயிரிழந்துவிட்டார்.
இந்த ஆண்டு தாய்லாந்தில் ‘ரேபிஸ்’ (Rabies) எனப்படும் வெறிநாய்க்கடி நோயால் உயிரிழந்த முதல் ஆளான அவர் மியன்மாரைச் சேர்ந்தவர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த ஆண்டின் பிற்பகுதியில் நாய்க்கடியால் பாதிக்கப்பட்ட அந்த ஆடவர், தடுப்பூசி போட்டுக்கொள்ள மறுத்ததாக அந்நாட்டு ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.
கிருமித்தொற்று உடல் முழுவதும் பரவியதால், நெஞ்சுவலி, தலைவலி, மூச்சுத்திணறல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு அவர் ஜனவரி 25ஆம் தேதி உயிரிழந்தார்.
வெறிநாய்க்கடியால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தவிர்க்க விலங்குகள் கடித்தால் உடனடியாகத் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று அந்நாட்டின் நோய்த்தடுப்புப் பிரிவு அறிவுறுத்தியுள்ளது.
கடந்த 2025 டிசம்பரில் அந்த ஆடவரின் வலது கையை நாய்க்குட்டி ஒன்று கடித்ததாக விசாரணையில் தெரியவந்தது. அந்த நாய்க்குட்டி யாருடையது என அடையாளம் காணப்படவில்லை.
நோய்த்தொற்றுள்ள விலங்குகள் கடிப்பது, நகத்தால் கீறுவது, காயங்களை நாவால் வருடுவது ஆகியவற்றின் வழியாக வெறிநாய்க்கடி நோய் பரவுகிறது. விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு இந்நோய் பரவுமே தவிர, மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்குப் பரவாது.
கடிபட்ட பிறகும் அந்த ஆடவர் தமது காயத்தைச் சுத்தம் செய்யவில்லை. மருத்துவரை அணுகி தடுப்பூசியும் போட்டுக்கொள்ளவில்லை.
தொடர்புடைய செய்திகள்
தாய்லாந்தில் வெறிநாய்க்கடி நோயுள்ள விலங்குகள் உள்ளன. குறிப்பாக, அந்நாட்டின் கிழக்கு, வடகிழக்கு மற்றும் வடமேற்குப் பகுதிகளில் அவை அதிகம் காணப்படுகின்றன.
2025ஆம் ஆண்டில் சோன்புரி, டாக், சிசாக்கெட், நக்கோன் ரட்சசீமா, சாசோங்சாவ், ராயோங் ஆகிய இடங்களில் இந்நோயால் ஏழு உயிரிழப்புகள் நேர்ந்துள்ளன.
உயிரிழந்த அனைவருமே விலங்குகள் கடித்த பிறகு மருத்துவரை அணுகி சிகிச்சை பெறாதவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

