மலேசியாவில் $11.6 மில்லியன் மதிப்புள்ள வனவிலங்குப் பாகங்களை வைத்திருந்த வெளிநாட்டவர்

மலேசியாவில் $11.6 மில்லியன் மதிப்புள்ள வனவிலங்குப் பாகங்களை வைத்திருந்த வெளிநாட்டவர்

2 mins read
1e763900-bf1a-4861-a1ee-825b46410ecc
தாமான் ஜோகூர் ஜெயாவில் உள்ள ஜாலான் ரோஸ் மெரா 4/6 என்ற முகவரியில் உள்ள இந்த வீட்டில் பல்வேறு பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகளின் பாகங்களை அந்த வியட்னாமியர் வைத்திருந்தார். - படம்: த ஸ்டார்

ஜோகூர் பாரு: உரிமம் இல்லாமல் பல்வேறு பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகளின் பாகங்களை வைத்திருந்த இரண்டு குற்றச்சாட்டுகளை வியட்னாமியர் ஒருவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

ஏப்ரல் 10ஆம் தேதியன்று ஜோகூர் பாருவில் உள்ள அமர்வு நீதிமன்ற நீதிபதி மடிஹா ஸைனோல் முன்னிலையில், வியட்னாமிய மொழியில் குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்ட பின்னர், 39 வயதான ஹோவாங் வான் தாய் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

பாதுகாக்கப்பட்ட வனவிலங்கு இனமான மலைப்பாம்புகளின் 1,022 பித்தப்பைகளையும் 191 நாக்குகளையும் உரிமம் இல்லாமல் ஹோவாங் வைத்திருந்தது கண்டறியப்பட்டது.

ஏப்ரல் 4ஆம் தேதி இரவு 9.50 மணியளவில், தாமன் ஜோகூர் ஜெயாவில் உள்ள ஜாலான் ரோஸ் மெரா 4/6 என்ற முகவரியில் உள்ள ஒரு வீட்டில் அந்தக் குற்றத்தைப் புரிந்ததாக அவர்மீது குற்றம் சாட்டப்பட்டது.

வனவிலங்கு மற்றும் தேசிய பூங்காக்கள் துறையின் துணை அரசு வழக்கறிஞர் மாஸ் இஸ்ஸாட்டி லோக்மான், தாவர விலங்குகள் தொடர்பான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்கான தேதியைக் கோரினார்.

குற்றத்தின் தீவிரத்தையும், ஹோவாங் ஒரு குடிமகன் அல்லாதவர் என்பதையும் சுட்டிக்காட்டி, பிணை வழங்க வேண்டாம் என்றும் அவர் நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டார்.

இருப்பினும், வழக்கறிஞர் ஃபஸாலி அலி முகமது கஸாலி, உள்ளூர் மக்களுக்கும் வெளிநாட்டினருக்கும் இடையே நடத்தையில் எந்தப் பாகுபாடும் இருக்கக்கூடாது என்று கூறி, குடியுரிமை ஒரு காரணியாக இருக்கக்கூடாது என வாதிட்டார்.

பிணை குறித்து முடிவெடுப்பதற்கு முன்பு, அந்த வழக்கின் அடுத்த விசாரணைக்காகவும் ஹோவாங்கின் குடிநுழைவு நிலையை உறுதிசெய்வதற்காகவும் நீதிபதி மடிஹா ஏப்ரல் 20ஆம் தேதியன்று அடுத்த நீதிமன்ற விசாரணை நடைபெறும் என்று அறிவித்தார்.

ஏப்ரல் 4ஆம் தேதி, தாமன் ஜோகூர் ஜெயாவில் உள்ள ஒரு வீட்டில், பாம்பு மற்றும் கரடியின் பித்தப்பைகள் உட்பட, 36.8 மில்லியன் ரிங்கிட்டுக்கும் (S$11.6 மில்லியன்) மேல் மதிப்புள்ள வனவிலங்குப் பாகங்களின் குவியலை, வனவிலங்கு மற்றும் தேசிய பூங்காக்கள் துறை கண்டுபிடித்தது என்று த ஸ்டார் செய்தி தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்