ஷாங்காய்: குடிபோதையில் காப்பி கலக்கும் கரண்டியைத் தற்செயலாக விழுங்கிய சீன ஆடவர் ஒருவர், ஐந்து மாதங்களாக அதனைக் கனவென்றே நினைத்திருந்தார்.
இந்நிலையில், இம்மாதம் ஷாங்காய் ஸொங்ஷான் மருத்துவமனைக்குச் சென்று ஒரு மருத்துவரைச் சந்தித்தார் யான் என்ற அந்த 26 வயது ஆடவர். உணவுண்டபோது நெகிழியை அவர் விழுங்கிவிட்டாரோ என அம்மருத்துவர்க்கு ஐயம் எழுந்தது.
ஆனால், 15 சென்டிமீட்டர் நீளக் கரண்டி அவர் வயிற்றினுள் இருந்ததை அம்மருத்துவர் கண்டறிந்தார். அக்கரண்டி அவரது முன்சிறுகுடலில் ஆபத்தான நிலையில் சிக்கியிருந்தது. சிறு அசைவுகூட குடலைக் குத்திக் கிழித்து, ரத்தக்கசிவை ஏற்படுத்திவிடும் என்ற நிலை.
அப்போதுதான், இவ்வாண்டு ஜனவரியில் தாம் தாய்லாந்து சென்றிருந்தபோது தமக்கு ஏற்பட்ட அனுபவம் யானின் நினைவிற்கு வந்தது.
மது அருந்தியிருந்த அவர், வாந்தி எடுப்பதற்காகத் தமது அறையிலிருந்த காப்பிக் கரண்டியைப் பயன்படுத்தினார். அப்போது, தற்செயலாக அந்தப் பீங்கான் கரண்டியை அவர் விழுங்கிவிட்டார்.
ஆயினும், போதையில் இருந்ததால் அதனை உணராமல் அவர் ஆழ்ந்து உறங்கிவிட்டார்.
மறுநாள் காலையில் எழுந்த பிறகும், போதை முழுவதும் தெளியாததால் கனவில் தாம் கரண்டியை விழுங்கிவிட்டதாக அவர் நம்பினார். வாந்தி எடுத்ததால் தமக்கு வயிறு இன்னும் சரியாகவில்லை என்று அவர் நினைத்தார்.
அடுத்த ஐந்து மாதங்களுக்கு அவருக்கு எந்தப் பிரச்சினையும் ஏற்படவில்லை.
தொடர்புடைய செய்திகள்
இந்நிலையில், யானின் வயிற்றில் சிக்கியிருந்த கரண்டியை வெளியில் எடுப்பது அவ்வளவு எளிதானதாக இல்லை என்று மருத்துவர்கள் கூறினர். ஜூன் 18ஆம் தேதி ஒன்றரை மணி நேர அறுவை சிகிச்சைமூலம் அது அகற்றப்பட்டது.
அதன்பின் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய யான், தற்செயலாக கரண்டி கண்டறியப்பட்டு, அகற்றப்பட்டதற்காக நன்றி தெரிவித்தார்.