ஜகர்த்தா: ஜகார்த்தா அரசாங்கம் அண்மையில் வெளியிட்ட மருத்துவ அறிக்கையில் அரசாங்க ஊழியர்களில் பாதிக்கும் அதிகமானோரிடையே உடற்பருமன் கண்டறியப்பட்டுள்ளது.
நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்படுவதற்கான அபாயத்தைக் குறைக்கவும் அரசாங்கச் சேவையின் செயல்பாட்டை மேம்படுத்தவும் உடற்பயிற்சி உள்ளிட்ட வாழ்க்கைமுறையை அரசாங்க ஊழியர்கள் உடனடியாகக் கடைப்பிடிக்கும்படி ஜகார்த்தா ஆளுநர் பிரமொனோ அனுங் அறிவுறுத்தினார்.
2024ஆம் ஆண்டு 9,936 அரசாங்க ஊழியர்களிடையே மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. அத்தகையோரின் பிஎம்ஐ எனப்படும் உடல் எடை விகிதக் குறியீடு, ரத்த அழுத்தம், ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு, மனநலம் ஆகியவை பரிசோதிக்கப்பட்டன.
அதில் உடற்பருமன் பரவலான சுகாதாரப் பிரச்சினையாகக் காணப்பட்டது. அரசாங்க ஊழியர்களில் கிட்டத்தட்ட 62 விழுக்காட்டினர் உடற்பருமனால் பாதிக்கப்பட்டிருந்தனர்.
அவர்களில் மூன்றில் இரண்டு பகுதியினரிடம் முதற்கட்ட உடற்பருமன் காணப்பட்டது. அவர்களின் பிஎம்ஐ குறியீடு 25லிருந்து 29.9க்கு இடைப்பட்டிருந்தது. இதர ஊழியர்களின் பிஎம்ஐ குறியீடு 30 அல்லது அதற்கும் அதிகமாக இருந்தது.
“இப்போதிருந்து கட்டாய உடற்பயிற்சிகளை நான் அமல்படுத்துகிறேன்,” என்று திரு பிரமோனோ ஜூலை 23ஆம் தேதி செய்தியாளர்களிடம் கூறினார். அடிக்கடி உடற்பயிற்சி செய்வது உடல் ஆரோக்கியத்தைப் பேணுவது மட்டுமின்றி ஒட்டுமொத்த அரசாங்கச் சேவையின் தரத்தையும் மேம்படுத்தும் என்றார் அவர்.
2024ஆம் ஆண்டு இயக்கம் ஒன்றின் மூலம் ஆரோக்கிய வாழ்க்கைமுறையை ஜகார்த்தா அரசாங்கம் முன்னிறுத்தியது. இயக்கத்தின் ஓர் அம்சமாக அரசாங்க ஊழியர்களும் பொதுமக்களும் ஒவ்வொரு நாளும் 7,500 அடிகள் நடக்க வேண்டும் என்று ஊக்குவிக்கப்பட்டனர். இருப்பினும், அந்த இயக்கம் நீண்டகாலம் தொடரவில்லை.
அண்மைய சுகாதார அறிக்கையைத் தொடர்ந்து அரசாங்க ஊழியர்களுக்கான காலை உடற்பயிற்சிகளை அதிகரிக்க ஜகார்த்தா அரசாங்கம் திட்டமிடுகிறது.
தொடர்புடைய செய்திகள்
“இப்போதைக்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமை காலையும் அரசாங்க ஊழியர்களுக்கான உடற்பயிற்சிகளைத் தீவிரப்படுத்தவிருக்கிறோம்,” என்று ஆளுநருக்கான சிறப்புப் பணியாளர் திரு சிக்கோ ஹகிம் கூறினார்.
2023ஆம் ஆண்டு ஜகார்த்தா சுகாதார அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் 18 வயதுக்கும் மேற்பட்ட குடிமக்களில் 32 விழுக்காட்டினரிடம் உடற்பருமன் கண்டறியப்பட்டது.

