இம்பால்/மணிப்பூர்: மணிப்பூரின் இளையர் விவகார, விளையாட்டுத் துறை உலகளாவிய பாரம்பரிய ‘தெக்வான்டோ’ அமைப்பின் (ஜிடிடிஎஃப்) ஆதரவோடு பூம்சே நகரில் அவ்வகைத் தற்காப்புக் கலைக்கான போட்டியை ஏற்பாடு செய்துள்ளது.
முதன்முறையாக அம்மாநிலத்தில் நடக்கும் போட்டி, அக்டோபர் 19ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை குமன்லம்பாக் உள்ளரங்கில் இடம்பெறும்.
கடந்த புதன்கிழமை நடந்த அதன் தொடக்கவிழாவில் மாநில முதல்வர் யும்னம் கேம்சந்த் சிங் கலந்துகொண்டு சிறப்பித்தார். அரசியலுக்கு வருவதற்கு முன்பே அக்கலையில் தேர்ச்சி பெற்றிருந்த முதல்வருக்கு நிகழ்ச்சியில் சிறப்பு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
அரசியல் பணிகளில் ஈடுபட்டிருந்தாலும் தற்காப்புக் கலையில் தாம் சளைத்தவர் அல்ல என்று உணர்த்தும் வகையில் முதல்வர் கேம்சந்த் அங்கு அவரின் திறனை வெளிப்படுத்தி அரங்கில் இருந்தோரை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
தெக்வான்டொ கலைக்கு திரு கேம்சந்த் ஆற்றியுள்ள அரும்பங்கினை அங்கீகரிக்கும் விதமாக ஜிடிடிஎஃப் அமைப்பின் தலைவர் மாஸ்டர் ஜுன் லீ முதல்வருக்கு அக்கலையின் ஒன்பதாம் நிலைக்கான உயரிய விருதை வழங்கிப் பாராட்டினார்.
தெக்வான்டோ கலையின் பிறப்பிடமான கொரியக் குடியரசிலிருந்து திரு ஜுன் லீயின் தலைமையில் வந்திருக்கும் குழுவினரின் பங்கேற்புடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள போட்டிகள் மணிப்பூர் மக்களுக்கு மிகச் சிறந்த ஊக்கமளிக்கும் என்று முதல்வர் நம்பிக்கை தெரிவித்தார். அனைத்துலக தரவரிசையில் அம்மாநில மக்கள் இடம்பெற இப்போட்டிகள் வாய்ப்பளிக்கும் எனவும் அவரது உரையில் கூறினார்.
பூம்சே போட்டிகள், தெக்வான்டோ கலை மணிப்பூர் மாநிலத்தில் வலுப்பெற்று, மேலும் அங்கீகாரம் பெற்றிட வழிவகுக்கும் என தாம் எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தெக்வான்டோ கலையை 1980ஆம் ஆண்டுகள் முதல் இன்றுவரை பின்பற்றும் மிகச் சிறந்த தற்காப்புக் கலைஞர்களில் முதல்வர் கேம்சந்தும் ஒருவர் என்று திரு ஜுன் லீ முதல்வரைப் பாராட்டிப் பேசினார். தேசியப் போட்டிகளில் பலமுறை வெற்றியாளர் பட்டத்தை வென்றுள்ள முதல்வர், இந்தியாவில் அக்கலையை புகழ்பெறச் செய்யவும் அதன் பயிற்சியை நிலைநிறுத்தவும் முக்கியப் பங்காற்றியுள்ளார் எனவும் விளக்கினார்.
மணிப்பூரில் விளையாட்டுத் துறையில் அனைத்து நிலைகளிலும் பல திறனார்கள் உள்ளனர் என்று மாநில உள்துறை, இளையர் விவகாரங்கள், விளையாட்டுத் துறை அமைச்சர் கோவிந்தாஸ் கொந்துஜம் பெருமையுடன் கூறினார். அவ்வகையில் அங்கு நடைபெறும் தற்காப்புக் கலைக்கான போட்டிகள் தெக்வான்டோ இயக்கத்தை வலுப்படுத்தி, மாநில மக்களை ஒருங்கிணைக்க உதவும் முக்கிய படியாக அமையும் என்று அவர் தெரிவித்தார்.
ஒழுக்கம், கட்டுப்பாடு போன்ற குணங்களை அடிப்படையாகக் கொண்டு, விளையாட்டுகள் வழியாக சம வாய்ப்புகளை ஏற்படுத்தி இளையோரின் திறன்களை அடையாளம் காணவேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். வன்முறையை விடுத்து, அமைதியான சமூகத்தை விளையாட்டுகள் மூலம் கட்டமைக்கும்படி இளையோர்களை அவர் கேட்டுக்கொண்டார்.
