பேங்காக்: தமது யூடியூப் ஒளியலைக்காக டிசம்பர் 18ஆம் தேதி காலையில் காணொளி ஒன்றைப் பதிவுசெய்துகொண்டிருந்த 53 வயது ஆடவர் ஒருவர் பயணிகள் ரயில் மோதி உயிரிழந்தார்.
ரட்சாபூரியின் முவாங் பகுதியைச் சேர்ந்த திரு விரோட் அரண்யான்கேட், சுலாலோங்கோர்ன் பாலத்தில் நின்றிருந்தபோது ரயில் அவர் மீது மோதியது. அவரது உடல் நசுங்கிச் சிதைவுகளானதாகக் கூறப்படுகிறது.
மிதிவண்டிகளில் பயணம் செய்வதை விளம்பரப்படுத்தும் வகையில் ஆடவர் பல காணொளிகளைப் பதிவுசெய்து வந்தார். காணொளிகளைத் தமது ஃபேஸ்புக் பக்கத்திலும் அவர் பதிவேற்றம் செய்து வந்ததாக அறியப்படுகிறது.
ஆடவரின் யூடியூப் ஒளியலையை 140 பேர் பின்தொடர்கின்றனர். அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் 23,000 பேர் பின்தொடர்கின்றனர்.
வேகமாக வந்த ரயில் திரு விரோட்டின் மிதிவண்டியையும் சிதைத்ததுடன் ஆடவரது உடலைச் சுமார் 50 மீட்டருக்கு இழுத்துச் சென்றதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
திரு விரோட் தண்டவாளத்தில் அமர்ந்தபடி காணொளி எடுப்பதைத் தாம் பார்த்ததாக ரயில் ஓட்டுநர் காவல் அதிகாரிகளிடம் கூறினார். அவர் எச்சரிக்கை ஒலி எழுப்பியதை அடுத்து திரு விரோட் அங்கிருந்து நகர நேரமில்லாமல் போய்விட்டது.
திரு விரோட்டின் கடைசி ஃபேஸ்புக் பதிவுக்கு 13 பேர் சோக முகக் குறியீடுகளைப் பதிவிட்டிருந்தனர். எழுவர் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்திருந்தனர்.

