தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

காஸாவில் ஏராளமானோர் பட்டினி: உணவு நிலையங்களை நிறுவப்போவதாகக் கூறும் டிரம்ப்

2 mins read
aa2b6ca7-909e-491e-b27f-8828ed00cc2b
காஸாவில் திங்கட்கிழமை (ஜூலை 28) உணவு வாங்கக் காத்திருக்கும் பாலஸ்தீனர்கள். - படம்: ராய்ட்டர்ஸ்

காஸாவில் ஏராளமானோர் பசி, பட்டினியால் வாடுவதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

மனிதாபிமான உதவிகள் அந்த வட்டாரத்திற்குச் சென்றுசேர இஸ்ரேல் இன்னும் அதிகம் செய்யலாம் என்றார் அவர். பாலஸ்தீனர்கள் பிள்ளைகளுக்கு உணவளிக்கச் சிரமப்படுகின்றனர். உதவிப்பொருள்களை அதிகரிக்கக் கூடுதல் நடவடிக்கைகளை எடுக்கப்போவதாக இஸ்ரேல் தெரிவித்த மறுநாள் திரு டிரம்ப்பின் கருத்து வந்துள்ளது.

காஸாவில் ஈராண்டுகளாகத் தொடரும் போரில் ஏறக்குறைய 60,000 பேர் மாண்டுவிட்டனர். பட்டினியாலும் ஊட்டச்சத்துக் குறைபாட்டாலும் பலியாவோர் எண்ணிக்கை கூடிவருவதாக காஸாவின் சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறுகின்றனர். பசியால் வாடும் பிள்ளைகளின் படங்கள் உலகை உலுக்கிவருகின்றன. நிலைமை படுமோசமடைந்துள்ள நிலையில் இஸ்ரேலுக்கு எதிராக அனைத்துலக அளவில் கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன.

திரு டிரம்ப்பின் அண்மை மதிப்பீடு இஸ்ரேலியப் பிரதமர் நெட்டன்யாகுவின் கருத்துக்கு மாறாக அமைந்துள்ளது. திரு நெட்டன்யாகு “காஸாவில் பட்டினி இல்லை,” என்று ‘எக்ஸ்’ (X) தளத்தில் திங்கட்கிழமை (ஜூலை 28) கூறினார். ஆனால் பின்னேரத்தில் தமது நிலையை அவர் மாற்றிக்கொண்டார்.

காஸாவில் நிலைமை சிரமமாய் இருப்பதாகத் திரு நெட்டன்யாகு சொன்னார். அனைத்துலக அமைப்புகளுடன் சேர்ந்து பெருமளவில் உதவிப்பொருள்கள் அங்குப் போவதற்கு இஸ்ரேல் முயற்சி எடுக்கும் என்றார் அவர்.

ஸ்காட்லாந்து சென்றுள்ள திரு டிரம்ப், காஸாவிற்குள் உதவிப்பொருள்களை அனுப்புவதில் இஸ்ரேலுக்கு அதிகப் பொறுப்பிருப்பதாகக் கூறினார். அவ்வாறு செய்தால் பலரைக் காப்பாற்ற முடியும் என்று அவர் சொன்னார். அமெரிக்கா அங்கு உணவு நிலையங்களை அமைக்கப்போவதாகவும் திரு டிரம்ப் குறிப்பிட்டார். அதற்காக மற்ற நாடுகளுடன் அமெரிக்கா இணைந்து பணியாற்றும் என்று அவர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்