ஜோர்தான் தேவாலயத் தாக்குதலில் பலர் மரணம்: சிங்கப்பூர்த் தலைவர்கள் அனுதாபம்

ஜோர்தான் தேவாலயத் தாக்குதலில் பலர் மரணம்: சிங்கப்பூர்த் தலைவர்கள் அனுதாபம்

படம்: ராய்ட்டர்ஸ்

26 Oct 2026 - 2:05 pm

2 mins read

ஜோர்தானின் தென்பகுதியில் உள்ள தேவாலயம் தாக்கப்பட்டதில் ஒன்பது உயிர்கள் பறிபோன சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்து அந்நாட்டுத் தலைவர்களுக்குச் சிங்கப்பூர் அதிபரும் பிரதமரும் செய்தி அனுப்பி உள்ளனர்.

ஜோர்தான் பேரரசர் அப்துல்லா அல் ஹுசைனுக்கு அதிபர் தர்மன் சண்முகரத்னம் அனுப்பியுள்ள அனுதாபச் செய்தியில், காராக் நகரில் உள்ள செயின்ட் ஜார்ஜஸ் கிரீக் ஆர்த்தடக்ஸ் தேவாலயத்தில் மேற்கொள்ளப்பட்ட மோசமான தாக்குதலை அறிந்து அதிர்ச்சியுற்றதாகத் தெரிவித்துள்ளார்.

அந்தத் தாக்குதலில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்குச் சிங்கப்பூர் மக்கள் சார்பாக அனுதாபம் தெரிவிப்பதாகவும் தமது செய்தியில் அதிபர் தர்மன் கூறியுள்ளார்.

“அந்த மூடத்தனமான வன்செயலைச் சிங்கப்பூர் வன்மையாகக் கண்டிக்கிறது. வழிபாட்டுத்தலத்தில் உள்ள அப்பாவி மக்களைக் குறிவைத்துத் தாக்குவது கண்டிக்கத்தக்கது.

“உலகின் எந்த மூலையிலிருந்தும் எந்த வடிவத்திலும் மேற்கொள்ளப்படும் பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் ஜோர்தானிய மக்களுடன் சிங்கப்பூர் துணைநிற்கும்,” என்று திரு தர்மன் குறிப்பிட்டுள்ளார்.

இந்தத் துயரமான சூழலிலும் ஜோர்தானிய மக்களின் ஒற்றுமை நீடிக்கும் என்று தாம் நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் வோங், ஜோர்தானியப் பிரதமர் ஜாஃபர் ஹசனுக்கு எழுதிய கடிதத்தில், இந்தப் பயங்கரவாதத் தாக்குதலைக் கண்டித்தார்.

அவர் தமது அனுதாபச் செய்தியில், “வழிபாட்டுத் தலத்தில் பொதுமக்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட இந்தச் செயலைச் சிங்கப்பூர் வன்மையாகக் கண்டிக்கிறது. இத்தகைய வன்செயல்கள் மனிதாபிமானமற்றவை. எந்த வகையிலும் அவற்றை நியாயப்படுத்த முடியாது,” என்று குறிப்பிட்டுள்ளார்.

மரணமடைந்தோரின் குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்த திரு வோங், காயமடைந்தோர் விரைவில் குணமடைய வாழ்த்துவதாகக் கூறியுள்ளார்.

ஜோர்தான் தேவாலயத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (அக்டோபர் 23) இறுதிச்சடங்கு ஒன்று நடைபெற்ற வேளையில் அங்கு துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. பட்டப்பகலில் மேற்கொள்ளப்பட்ட அந்தத் தாக்குதல் சில நிமிடங்கள் நீடித்தது.

ஜோர்தானின் சிறுபான்மைக் கிறிஸ்துவச் சமூகத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட அரிதான தாக்குதல் அது என்று ஊடகங்கள் குறிப்பிட்டன. அந்தச் சம்பவம் தொடர்பில் மூன்று பேரைப் பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளதாக அரசாங்கத் தொலைக்காட்சி திங்கட்கிழமை (அக்டோபர் 26) தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்