இஸ்ரேலியத் தாக்குதலால் காஸா நகரில் பலர் மரணம்

2 mins read
bc38349e-f36c-4974-9de4-709eccea25cd
இடம் பெயர்ந்த குடும்பங்களுக்கான முகாம் தாக்கப்பட்டதில் உறவினர்கள் மாண்டதாகக் கூறிய முஹம்மது ஹஜாஜ். - படம்: ராய்ட்டர்ஸ்.

காஸா நகரம்: காஸா வட்டாரத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 80க்கும் மேற்பட்டோர் மாண்டதாக உள்ளூர் மருத்துவமனைகள் தெரிவித்துள்ளன. மரணமடைந்தோரில் அதிகமானவர்கள் காஸா நகரைச் சேர்ந்தவர்கள்.

நகரின் நடுப்பகுதியில் அமைந்துள்ள தராஜ் குடியிருப்புப் பேட்டையின் ஃபிராஸ் சந்தைக்கு அருகிலிருந்த கட்டடமொன்றும் முகாம்களும் தாக்கப்பட்டன. இடம் பெயர்ந்த குடும்பத்தினர் அவற்றில் வசித்துவந்தனர். அவர்களில் பெண்களும் சிறுவர்களும் உட்பட 20 பேர் உயிரிழந்ததாகக் கூறப்பட்டது.

ஹமா‌‌ஸ் குழுவின் போராளிகள் இருவரைக் குறிவைத்ததாகச் சொன்னது இஸ்ரேலிய ராணுவம். மாண்டோர் எண்ணிக்கை குறித்த தகவலில் முரண்படுவதாக அது தெரிவித்தது.

இந்நிலையில், இஸ்ரேலிய பீரங்கி வாகனங்களும் படைகளும் நகரின் நடுப்பகுதியை நோக்கி முன்னேறுகின்றன. ஹமாசின் வசமுள்ள கடைசிக் கோட்டை அது என்கிறது இஸ்ரேல்.

ஹமாசின் பிடியில் எஞ்சியிருக்கும் பிணையாளிகளை விடுவிப்பதும் அந்தக் குழு தோல்வியடைவதுமே தரைத் தாக்குதலின் நோக்கம் என்று இஸ்ரேலிய ராணுவம் குறிப்பிட்டது.

காஸா நகரிலிருந்து ஆயிரக்கணக்கான குடியிருப்பாளர்கள் வெளியேறிவிட்டனர். அங்குப் பஞ்சம் நிலவுவதை ஐக்கிய நாட்டு நிறுவன அமைப்பொன்று சென்ற மாதம் (ஆகஸ்ட் 2025) உறுதிசெய்தது. ஆயினும் இன்னும் ஆயிரக்கணக்கானவர்கள் கொடுமையான சூழலில் சிக்கித் தவிப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. சுகாதார, அத்தியாவசியச் சேவைகள் அங்கு நிலைகுலைந்துபோய்விட்டன.

இவ்வேளையில், அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் மத்திய கிழக்கிலும் காஸாவிலும் அமைதி நிலவ 21 அம்சங்கள் அடங்கிய திட்டத்தை அரபு, முஸ்லிம் தலைவர்களிடம் முன்வைத்துள்ளார். நியூயார்க்கில் நடைபெறும் ஐக்கிய நாட்டுப் பொதுச் சபைக் கூட்டத்திற்கு இடையே திரு டிரம்ப் திட்டத்தைச் சமர்ப்பித்ததாக அமெரிக்காவின் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்கோஃப் கூறினார்.

திட்டத்தின் விவரங்களை அவர் பகிர்ந்துகொள்ளவில்லை. ஆனால் அது இஸ்ரேலின் அக்கறைகளிலும் வட்டாரத்தில் உள்ள அனைவரின் கவலைகளிலும் கவனம் செலுத்தியிருப்பதாகத் திரு விட்கோஃப் சொன்னார்.

“வரும் நாள்களில் மத்திய கிழக்கு விவகாரத்தில் திருப்புமுனை ஏற்படும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது,” என்றார் அவர்.

இதற்கிடையே, காஸா நகரில் உள்ள மருத்துவமனைகள், இஸ்ரேலியத் தாக்குதலால் மாண்ட 60க்கும் மேற்பட்டோரின் சடலங்கள் பெறப்பட்டதை உறுதிசெய்துள்ளன.

குறிப்புச் சொற்கள்