மணிலா: மியன்மாரில் ராக்கைன் மாநிலத்தில் நடத்தப்பட்ட விமானத் தாக்குதலில் பலர் உயிரிழந்தது குறித்து ஆசியான் அமைப்பின் தற்போதைய தலைவரான பிலிப்பீன்ஸ் கவலை தெரிவித்துள்ளது.
இந்த விவகாரத்தில் மியன்மாருக்கு எந்த வகையில் உதவுவது என்பது குறித்து ஆசியான் அமைப்பிற்குள் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாகவும் அது கூறியுள்ளது.
இந்தத் தாக்குதலில் பலர் காயமடைந்ததுடன் பெருத்த சேதமும் ஏற்பட்டுள்ளது.
“பிலிப்பீன்ஸ் அங்குள்ள நிலவரங்களை அணுக்கமாகக் கண்காணித்து வருகிறது. மேலும் உயிரிழப்புகள், பலர் காயமடைந்த தாக்குதல்கள் குறித்து கவலையடைகிறோம்,” என்று ஆசியான் விவகாரங்களுக்கான வெளியுறவுத் துறை உதவிச் செயலாளர் அனா மேரி ஹெர்னாண்டோ அக்டோபர் 3ஆம் தேதி மின்னஞ்சலில் தெரிவித்துள்ளார்.
ஆசியான் தலைவராக, பிலிப்பீன்ஸ் அனைத்து உறுப்பு நாடுகளின் கருத்துகளையும் கவனத்தில் கொண்டு வட்டாரக் கூட்டமைப்பின் ஒருமித்த கருத்து அடிப்படையிலான அணுகுமுறை மேற்கொள்ளப்படும் என்று அது மேலும் தெரிவித்துள்ளது.
பங்ளாதேஷ் எல்லையில் உள்ள கியாக்டாவ் பகுதியில் செப்டம்பர் 28ஆம் தேதி நடத்தப்பட்ட விமானத் தாக்குதலில் குறைந்தது 50 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர் என்று சொல்லப்படுகிறது.
இது, கடந்த டிசம்பர் மாதம் மருத்துவமனைமீது நடத்தப்பட்ட தாக்குதலைவிட ராக்கைன் மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட மிக மோசமான தாக்குதலாகும்.
2021ஆம் ஆண்டின் ராணுவப் புரட்சிக்குப் பிறகு மியன்மார் நாடு தழுவிய உள்நாட்டுப் போரில் முடங்கியுள்ளது. அரகான் ராணுவம் உள்ளிட்ட ஆயுதமேந்திய குழுக்கள் அந்நாட்டின் ராணுவத்திற்கு எதிராகப் போராடி வருகின்றன.
உள்நாட்டுப் போரில் ஏறக்குறைய 1,00,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 35 லட்சத்திற்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளனர்.
