இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள ஷியா பள்ளிவாசல் ஒன்றில் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 6) நடந்த தற்கொலைப் படைத் தாக்குதலில் குறைந்தபட்சம் 31 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் எண்ணிக்கை 169 ஆக உயர்ந்துள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தென்கிழக்கு இஸ்லாமாபாத்தில் உள்ள கதீஜா துல் குப்ரா பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை தொழுகையின்போது பள்ளிவாசலில் வெடிப்புச் சம்பவம் நடந்ததாக அதிகாரி ஜாஃபர் இக்பால் தெரிவித்தார்.
“பலர் மருத்துவமனைகளுக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளனர். இந்த நேரத்தில் எத்தனை பேர் இறந்துள்ளனர் என்பதை உறுதியாக சொல்லமுடியாது, உயிரிழந்தோர் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக்கூடும்” என்றும் அவர் கூறினார்.
சம்பவத்தின் பின்னணி இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்றும், விசாரணை தொடர்கிறது என்றும் காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்த இடத்தில் மீட்புக் குழுவினர் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

