மலேசியர்கள் பலர் தாமதமாகத் திருமணம் செய்துகொள்கின்றனர்: ஆய்வு

மலேசியர்கள் பலர் தாமதமாகத் திருமணம் செய்துகொள்கின்றனர்: ஆய்வு

படம்: நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

03 Nov 2026 - 8:05 pm

2 mins read

கோலாலம்பூர்: மலேசியர்கள் தாமதமாகத் திருமணம் செய்துகொள்வதும், சிறிய குடும்பங்களாக வாழ்வதும் அதிகரித்து வருகிறது. நிதி சார்ந்த கவலைகள், பொருத்தமான துணையின்மை ஆகியவை மக்கள் திருமணம் செய்துகொள்ளாமல் இருப்பதற்கான முக்கியக் காரணங்களாக உள்ளன என்று அமைச்சர் ஒருவர், செவ்வாய்க்கிழமையன்று (நவம்பர் 3) தெரிவித்தார்.

பெண்கள், குடும்பம், சமூக மேம்பாட்டுத்துறை அமைச்சர் நான்சி சுக்ரி, நவம்பர் 3ஆம் தேதி நடைபெற்ற ‘ஆறாவது மலேசிய மக்கள் தொகை, குடும்ப ஆய்வின்’ அறிக்கை வெளியீட்டு விழாவில் இந்தத் தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.

ஆறாவது மலேசிய மக்கள் தொகை, குடும்ப ஆய்வு என்பது, சிறந்த குடும்பக் கொள்கைகளை வகுப்பதற்கு உதவும் வகையில், தேசிய மக்கள் தொகை, குடும்ப மேம்பாட்டு வாரியத்தால் ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் ஒருமுறை நடத்தப்படும் ஒரு தேசிய அளவிலான ஆய்வு.

திருமணமாகாதவர்களில் 50.6 விழுக்காட்டினர் தங்களுக்கு ஏற்ற துணை கிடைக்காததே தாங்கள் இன்னும் திருமணமாகாமல் இருப்பதற்குக் காரணம் என்று கூறியுள்ளதாகவும், 47.2 விழுக்காட்டினர் நிதி சார்ந்த காரணங்களைக் குறிப்பிட்டுள்ளதாகவும் திருவாட்டி நான்சி தெரிவித்தார்.

“இருப்பினும், குடும்பத்தைத் தொடங்க வேண்டும் என்ற விருப்பம் வலுவாகவே உள்ளது. திருமணமாகாதவர்களில் பத்தில் எட்டு பேருக்கும் அதிகமானோர் திருமணம் செய்துகொள்ளும் எண்ணத்தைக் கொண்டுள்ளனர்.

“மேலும், சராசரி குடும்ப அளவு 2014ல் 4.0 நபர்களாக இருந்த நிலையில், 2024ல் அது 3.8 நபர்களாகக் குறைந்துள்ளதையும் இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது.

“இதே காலகட்டத்தில், முதலாவது திருமணத்தின் சராசரி வயது ஆண்களுக்கு 27.1 ஆகவும், பெண்களுக்கு 24 ஆகவும் உயர்ந்துள்ளது,” என்று அவர் மேலும் கூறினார்.

இந்தக் கண்டுபிடிப்புகள் குடும்பங்களுக்கான ஆதரவு அமைப்புகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பதாகத் திருவாட்டி நான்சி கூறினார். குறிப்பாக, திருமணமான தம்பதிகள் வேலை, குழந்தைகளைப் பராமரிக்கும் பொறுப்புகள் ஆகிய இரண்டையும் ஒரே நேரத்தில் கையாள வேண்டிய சூழலில் இது மிகவும் அவசியமானது.

குழந்தைப் பராமரிப்பில் தாத்தா-பாட்டிகள் தொடர்ந்து முக்கியப் பங்காற்றி வருவதாகவும், ஆறு வயது, அதற்கு உட்பட்ட குழந்தைகளில் 25.3 விழுக்காட்டினரை அவர்களே கவனித்துக்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் 17.5 விழுக்காட்டுக் குழந்தைகள் பராமரிப்பு நிலையங்களுக்கு அனுப்பப்படுகின்றனர்.

“மலேசியாவில் மக்கள் தொகையின் தரம், குடும்ப நலன் என்பது நிகழ்காலத்தின் யதார்த்தமாகவும், எதிர்காலத்தின் தாக்கமாகவும் அமைகிறது,” என்றும் அமைச்சர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்
ஆய்வுகுடும்பம்குழந்தை