சோல்: இணையவழி கொடுமைப்படுத்துதல், மின்னணு சாதனங்கள் தொடர்பான பிற மாணவர் பிரச்சினைகளைக் குறைக்கும் நோக்கில், தென்கொரியாவின் கல்வி அதிகாரிகள், இரண்டாம் பருவத்திலிருந்து விடுமுறை நாள்களிலும் திறன்பேசிப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் முன்னோடித் திட்டங்களை விரிவுபடுத்த உள்ளனர்.
கியோங்கி மாநிலக் கல்வி அலுவலகம் 2026ஆம் ஆண்டின் இறுதிக்குள் 300 பள்ளிகளை ‘கைப்பேசி அற்ற பள்ளிகளாக’ அறிவிக்கத் திட்டமிட்டுள்ளது என்று ஆகஸ்ட் 13ஆம் தேதியன்று கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.
பங்கேற்கும் பள்ளிகள், கல்விச் செயல்பாடுகளுடன் தொடர்பில்லாத திறன்பேசிப் பயன்பாட்டைத் தடை செய்வதோடு, வாசிப்பு, கலை, கலாசார நிகழ்ச்சிகள், விளையாட்டு போன்ற மாற்று வழிகளையும் விரிவுபடுத்தும்.
காங்வோன் மாநிலக் கல்வி அலுவலகம், 2026ஆம் ஆண்டில் ‘திறன்பேசி அற்ற பள்ளிகள்’ என்று அழைக்கப்படும் திட்டத்தை முன்னோட்டமாகச் செயல்படுத்த, 10 தொடக்க, நடுநிலை, உயர்நிலைப் பள்ளிகளையும், மூன்று மழலையர் பள்ளிகளையும் தேர்ந்தெடுத்துள்ளது. 2029ஆம் ஆண்டுக்குள் இந்தத் திட்டத்தை 150 கல்வி நிலையங்களுக்கு விரிவுபடுத்தவும் அது திட்டமிட்டுள்ளது.
2027ஆம் ஆண்டு முதல், இணையச் செயல்பாடுகள் முடக்கப்பட்ட மாணவர்களுக்கு 10,000 ‘தூய்மையான கைப்பேசிகளை’ விநியோகிக்கவும் அந்த அலுவலகம் திட்டமிட்டுள்ளது.
மார்ச் மாதம் நடைமுறைக்கு வந்த திருத்தப்பட்ட கல்விச் சட்டத்தைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அச்சட்டம், மாணவர்கள் வகுப்பறையில் திறன்பேசிகளைப் பயன்படுத்துவதைத் தடை செய்கிறது. திறன்பேசி மீதான அதீத சார்பு, இணையவழி கொடுமைப்படுத்துதல் மற்றும் கற்றலில் ஏற்படும் இடையூறுகளைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் கல்வி அதிகாரிகள் தற்போது விரிவான கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகின்றனர்.
டேகு பெருநகர கல்வி அலுவலகமும், வட ஜியோல்லா மாநில கல்வி அலுவலகமும் செப்டம்பர் மாதம் இதேபோன்ற முன்னோடித் திட்டங்களைத் தொடங்க உள்ளன.
தேசிய அளவிலான இதேபோன்ற திட்டங்கள் தொடங்கப்படவுள்ளன. கல்வி அமைச்சு, செப்டம்பர் மாதம் 200 தன்னார்வப் பள்ளிகளில் தனது முன்னோட்டத் திட்டத்தைத் தொடங்கி, பின்னர் 2027ல் அதனை 400 பள்ளிகளுக்கு விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளது.
அதிகப்படியான திறன்பேசி பயன்பாடு வகுப்பறையில் கவனச்சிதறலுக்கும், ஆசிரியர்களின் அதிகார மீறல்களுக்கும், பள்ளி வன்முறைக்கும் வழிவகுக்கிறது என்ற கவலைகளுக்கு மத்தியில், கடுமையான கட்டுப்பாடுகளுக்கான கோரிக்கைகள் வலுப்பெற்றுள்ளன.


