சான் இசிட்ரோ: அர்ஜென்டினாவின் காற்பந்துச் சகாப்தம் டியேகோ மரடோனாவின் 2020ஆம் ஆண்டு மறைவு தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மருத்துவர் லியோபோல்டோ லூக் முற்றிலும் நிரபராதி என்றும் அவர் இந்தப் பிரச்சினையில் பலிகடா ஆக்கப்பட்டுள்ளார் என்றும் அவரது வழக்கறிஞர் புதன்கிழமையன்று (அக்டோபர் 21) நடைபெற்ற இறுதி வாதங்களின்போது நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
மரடோனாவின் மரணம் முன்கூட்டியே கணிக்கக்கூடிய ஒன்றுதான் என்ற அரசுத் தரப்பு வழக்கறிஞரின் வாதத்தைப் பிரதிவாதி தரப்பு வழக்கறிஞர் ரொபெர்ட்டோ ரால்லின் நிராகரித்தார்.
அதேவேளையில், மற்றொரு தற்காப்பு வழக்கறிஞரான ஃபிரான்சிஸ்கோ ஓனெட்டோ, மரடோனாவின் மறைவு திடீரெனவும் எதிர்பார்க்க முடியாதபடியும் ஏற்பட்ட மாரடைப்பினால் விளைந்தது என்று சுட்டிக்காட்டினார்.
“இந்தத் துயரகரமான முடிவை முன்கூட்டியே கணிப்பதற்கான சாத்தியக்கூறுகள் சிறிதும் இருக்கவில்லை,” என்று ஓனெட்டோ உறுதியாகக் கூறினார்.
மரடோனா இறந்த சமயத்தில் அவருக்கு முக்கிய முடிவுகளை எடுக்கும் அதிகாரத்தில் இருந்த நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணரான லூக்கிற்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்க வேண்டும் என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் கோரியுள்ளனர்.
“தொலைக்காட்சி முழக்கங்கள் மூலமாக இல்லாமல், அதை உறுதிப்படுத்தும் சான்றுகளின் அடிப்படையில் லூக்கின் நிரபராதித் தன்மையை நிரூபிக்கவே இங்கு வந்துள்ளோம். லியோபோல்டோ லூக் இங்குப் பலிகடா ஆக்கப்பட்டுள்ளார்,” என்று ரால்லின் வாதாடினார்.
மரடோனா, தமது 60வது வயதில் நுரையீரல் வீக்கத்துடன் கூடிய சுவாசக் கோளாற்றால் காலமானார். தலையில் உறைந்திருந்த இரத்தக் கட்டியை அகற்றுவதற்கான அறுவை சிகிச்சைக்குப் பிறகு, புவெனஸ் அயர்சின் வடக்கே உள்ள டிக்ரே பகுதியில் அவர் தங்கியிருந்த வாடகை இல்லத்தின் படுக்கையில் இறந்துகிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அர்ஜென்டினாவின் செல்லப் பிள்ளையாகக் கருதப்பட்ட இவரது மறைவு, கொவிட்-19 பெருந்தொற்றுக்கு நடுவே நாடளாவிய துயரத்தை ஏற்படுத்தியது.
