லாஸ் ஏஞ்சலிஸ்: அமெரிக்காவின் போர்ப் படை வீரர்கள் இன்னும் இரு நாள்களில் தேசியக் காவற் படையுடன் இணைந்து லாஸ் ஏஞ்சலிஸ் சாலைகளில் நடக்கும் ஆர்ப்பாட்டங்களைக் கட்டுப்படுத்துவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், குடிநுழைவு அதிகாரிகள் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களைக் கைது செய்யும்போது அதைத் தடுத்து நிறுத்துபவர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்களும் கைது செய்யப்படுவார்கள் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சில நாள்களுக்கு முன்னர் கலிஃபோர்னியா ஆளுநர் கேவின் நியூசமினின் கருத்தை எதிர்த்து அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் நடக்கும் ஆர்ப்பாட்டத்தைக் கட்டுப்படுத்த போர்ப் படை வீரர்கள் களமிறக்கப்படுவார்கள் என்று அறிவித்தார்.
அதிபர் டிரம்ப்பின் முடிவு நாடளவில் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது. அமெரிக்க மக்கள்மீது அமெரிக்கப் போர் படையினரை ஏவி விடலாமா என்று கேள்விகள் எழுப்பப்பட்டன.
அதன்பின்னர் லாஸ் ஏஞ்சலிஸ் ஆர்ப்பாட்டம் போல் நியூயார்க், அட்லாண்டா, சிகாகோ உள்ளிட்ட முக்கியமான நகரங்களிலும் ஆர்ப்பாட்டம் வெடித்தது.
“நான் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லை என்றால் லாஸ் ஏஞ்சலிஸ் நகரம் முற்றிலும் அழிக்கப்பட்டுவிடும்,” என்று அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
லாஸ் ஏஞ்சலிஸ் ஆர்ப்பாட்டம் புதன்கிழமை (ஜூன் 11) ஆறாவது நாளாகத் தொடர்ந்தது. பெரும்பாலான இடங்களில் அமைதியான முறையில் மக்கள் போராட்டம் நடத்தினர். ஒரு சில இடங்களில் மட்டும் வன்முறை வெடித்தது.
குடியேறிகளைக் கைது செய்யும் நடவடிக்கையை எதிர்த்து ஜூன் 6ஆம் தேதி லாஸ் ஏஞ்சலிஸ் நகரின் மத்திய வட்டாரத்தில் போராட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தைத் தொடங்கினர்.
தொடர்புடைய செய்திகள்
அந்த ஆர்ப்பாட்டத்தில் வாகனங்கள் கொளுத்தப்பட்டன, கடைகள் சூறையாடப்பட்டன.
இதைக் கட்டுப்படுத்த ஜூன் 7ஆம் தேதி அதிபர் டிரம்ப் தேசியக் காவற் படையை அந்நகரில் பணியமர்த்தினார். நிலைமை கட்டுக்கடங்காததால் ஜூன் 9ஆம் தேதி லாஸ் ஏஞ்சலிசுக்கு போர்ப் படை வீரர்களை டிரம்ப் அனுப்பினார்.
இந்நிலையில், தேசியக் காவற்படை, போர்ப் படை வீரர்கள் லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் அமலாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தற்காலிகத் தடை விதிக்க வேண்டும் என்று கலிஃபோர்னியா மாநில தரப்பில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது

