தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பொருத்தமான வயதில் திருமணம்: சீன சுகாதார ஆணையத்தின் தீவிர முயற்சி

2 mins read
சீனாவில் ஊழியர்களின் ஓய்வு வயதும் 1978க்குப் பிறகு முதல் முறையாக உயர்த்தப்படுகிறது.
b9bbf123-de70-4a67-936d-7e916d26590d
திருமணத்திற்கு முன்பு திருமண உடையில் படம் பிடித்துக் கொள்ளும் தம்பதி. சீனாவில் பிறப்பு விகிதம் குறைந்துள்ளதால் மக்கள்தொகை வீழ்ச்சியடைந்து வருகிறது. - கோப்புப் படம்: சைனா பிரஸ்

ஹாங்காங்: சீனாவின் தேசிய சுகாதார ஆணையம், பொருத்தமான வயதில் திருமணமும் குழந்தையையும் பெற்றுக் கொள்வதை ஆதரிக்கும் அதிக முயற்சிகளில் கவனம் செலுத்த விருக்கிறது என்று அந்நாட்டின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சீனாவில் பிறப்பு விகிதம் குறைவதால் மக்கள்தொகையும் வீழ்ச்சியடைந்து வருகிறது. இவ்வேளையில் ஆணையத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தேசிய சுகாதார ஆணையத்தின் துணைத் தலைவரான யூ சியூஜுன், திருமணம் செய்து கொள்ளுதல், குழந்தை பெற்றுக் கொள்ளுதல், குடும்பம் ஆகியவற்றை நோக்கி இளையர்களை வழிநடத்த பெற்றோருக்குரிய பொறுப்புகளை பகிர்ந்துகொள்ளவும் அழைப்பு விடுக்கப்படும் என்று கூறினார்.

குளோபல் டைம்ஸ் இத்தகவலை வியாழக்கிழமை அன்று வெளியிட்டது.

இது, திருமணம் மற்றும் குழந்தைப்பேறு பற்றிய புதிய கலாசாரத்தை வளர்க்க உதவும் என்றும் திரு யூ தெரிவித்துள்ளார்.

சீன நாட்டின் சட்டப்படி ஆண்கள் 22 வயதிற்குப் பிறகும் பெண்கள் 20 வயதிற்குப் பிறகும் மட்டுமே திருமணம் செய்ய முடியும்.

2023ஆம் ஆண்டில் தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டில் சீனாவின் மக்கள் தொகை குறைந்தது. இதுவரை இல்லாத அளவுக்கு பிறப்பு விகிதமும் குறைந்துள்ளது. இந்த நிலையில் அதிக பெண்கள் குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதை ஊக்குவிக்கும் முயற்சிகளை சீன அரசாங்கம் எடுத்து வருகிறது.

குழந்தைகளை பராமரிக்கும் செலவுகள் அதிகமாக இருப்பதால் பல பெண்கள் குழந்தைகள் இல்லாமல் இருப்பதையே விரும்புகின்றனர். திருமணங்களிலும் அவர்கள் அதிக ஆர்வமில்லாமல் இருக்கின்றனர்.

இவ்வாண்டின் முதல் பாதியில் திருமணங்களின் எண்ணிக்கை 2013ம் ஆண்டுக்குப் பிறகு மிகவும் குறைந்துள்ளதை அந்நாட்டின் அதிகாரபூர்வ தரவுகள் காட்டுகின்றன.

இதற்கிடையே ஓய்வு வயதை உயர்த்துவதற்கான உத்தேச திட்டத்திற்கு நாடாளுமன்றம் வெள்ளிக் கிழமை அன்று ஒப்புதல் அளித்துள்ளது.

நாட்டில் சுருங்கிவரும் ஊழியர் அணியால் பொருளியலுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை சரிகட்டும் வகையில் பல ஆண்டுகளாக தொழிலாளர் சட்டத்தில் இடம்பெற்றுள்ள ஓய்வு வயது மாற்றப் படுகிறது.

2025ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதியிலிருந்து ஆண்களுக்கான ஓய்வு வயது 63க்கு உயர்த்தப்படும்.

பெண்களுக்கான ஓய்வு வயது, அலுவலகப் பெண்களுக்கு 58ஆகவும் தொழிற்சாலைகளில் பணியாற்றும் பெண்களுக்கு 55ஆகவும் இருக்கும்.

மக்கள், நீண்ட காலம் வேலை செய்வதற்காக ஓய்வு வயது படிப்படியாக உயர்த்தப்படும் என்று கடந்த ஜூலையில் சீனா அறிவித்திருந்தது. பல மாநிலங்கள், ஓய்வூதிய வரவு செலவுத் திட்டங்களில் பற்றாக்குறையை எதிர்நோக்குவதால் அதனைச் சமாளிக்கும் வகையில் ஓய்வு வயது அதிகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

தற்போது ஆண்களுக்கான ஓய்வு வயது 60ஆகவும் அலுவலகப் பெண்களுக்கு 55ஆகவும் தொழிற்சாலை பெண்களுக்கு 50ஆகவும் உள்ளது.

குறிப்புச் சொற்கள்