மீடியா முலியா நிறுவனம்: கிட்டத்தட்ட 100 ஊழியர்களுக்குச் சம்பளத்துடன்கூடிய விடுப்பு

மீடியா முலியா நிறுவனம்: கிட்டத்தட்ட 100 ஊழியர்களுக்குச் சம்பளத்துடன்கூடிய விடுப்பு

படம்: மலாய்மெயில்

02 Nov 2026 - 6:08 pm

2 mins read

கோலாலம்பூர்: மீடியா முலியா ஊடக நிறுவனம், தனது வணிக மாதிரி, செயல்பாட்டுக் கட்டமைப்பையும் நிறுவனத்தின் எதிர்காலப் பாதையையும் மறுஆய்வு செய்துவருகிறது.

அதன் ஒரு பகுதியாக, நிறுவனத்தின் கிட்டத்தட்ட 100 ஊழியர்களுக்குச் சம்பளத்துடன்கூடிய விடுப்புத் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

மின்னிலக்கத் தளங்களில் அதிகக் கவனம் செலுத்தும் இன்றைய ஊடகத் துறையில் ஏற்பட்டுவரும் மாற்றங்களுக்கு மத்தியில், நிறுவனத்தின் வணிகத் தொடர்ச்சியையும் நீடித்த நிலைத்தன்மையையும் உறுதிசெய்வதற்காக அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக மீடியா முலியா நிறுவனத்தின் இயக்குநரும் தலைமை நிதி அதிகாரியுமான அப்த் வாஹித் இட்ரிஸ் தெரிவித்தார்.

இருப்பினும், அச்சு நாளிதழ்களின் மீது தொடர்ந்து பற்றுடன் இருக்கும் வாசகர்களுக்காக, அவற்றின் பதிப்புகளைத் தொடர நிறுவனம் கடப்பாடு கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அந்த மறுஆய்வு நடவடிக்கை, ‘உத்துசான் மலேசியா’, ‘கோஸ்மோ!’ முத்திரைகளின் அடையாளத்தையும் பின்னணியையும் கட்டிக்காக்கும் என்றார் அவர். அதே வேளையில், இரு பதிப்புகளின் தனித்துவமான உள்ளடக்கம், ஆசிரியர்களின் அடையாளம், செய்தி அணுகுமுறை, நம்பகத்தன்மை ஆகியவற்றைப் அது பாதுகாக்கும் என்றும் அப்த் வாஹித் கூறினார்.

கடந்த 2019ஆம் ஆண்டில் அவற்றின் முந்தைய உரிமையாளர் செயல்பாடுகளை நிறுத்திய பிறகு, அந்த இரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாளிதழ்களையும் தற்போதைய நிர்வாகமே முன்னதாக மீட்டெடுத்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.

பாதிக்கப்பட்ட ஊழியர்களின் எதிர்காலம் குறித்துப் பேசிய அப்த் வாஹித், நடைமுறையிலுள்ள சட்டங்களுக்கும் ஒழுங்குமுறைகளுக்கும் உட்பட்டு, அவர்களின் உரிமைகளையும் நலன்களையும் பாதுகாக்க நிறுவனம் கடப்பாடு கொண்டுள்ளதாகத் தெரிவித்தார்.

‘உத்துசான் மலேசியா’, ‘கோஸ்மோ!’ முத்திரைகளின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கு, அந்த உருமாற்றம் அவசியமானது என்றும் அவர் கூறினார்.

உயர்தரமான, அதிகாரபூர்வமான, நம்பகமான தலையங்க உள்ளடக்கங்களை வெளியிடுவதில் தொடர்ந்து கவனம் செலுத்தப்படும் என்றும் அப்த் வாஹித் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்