கோலாலம்பூர்: மலேசிய ஊடக நிறுவனமான ‘மீடியா முலியா’, தனது வர்த்தக மாதிரியை மறுசீரமைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, சுமார் 100 ஊழியர்களை உள்ளடக்கிய ஊதியத்துடன் கூடிய விடுப்புத் திட்டத்தை மறுபரிசீலனை செய்யவும் ஆட்குறைப்புக்கு மாற்றான வழிகளைக் கண்டறியவும் ஒப்புக்கொண்டுள்ளது.
வர்த்தகத் தொடர்ச்சியை உறுதிசெய்யவும் ஊழியர்களின் நலனைப் பாதுகாக்கவும் நிறுவனம் தொடர்ந்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருவதாகவும் பல்வேறு மாற்று வழிகளைப் பரிசீலிக்கத் தயாராக இருப்பதாகவும் அதன் இயக்குநரும் தலைமை நிதி அதிகாரியுமான அப்துல் வாஹிட் இட்ரிஸ் தெரிவித்தார்.
வியாழக்கிழமை (நவம்பர் 5) நாடாளுமன்றத்தில் தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சிலைச் சந்தித்த பிறகு அவர் இவ்வாறு கூறினார்.
“ஒரு விரிவான மதிப்பீட்டை நடத்தி, எங்கள் வர்த்தக மாதிரியை மறுசீரமைப்பதற்கான சிறந்த வழியைக் கண்டறிவதே எங்களின் உடனடி முன்னுரிமையாகும்.
“தகவல் தொடர்பு அமைச்சருடனான கூடுதல் மதிப்பீடு, கலந்துரையாடல்களைத் தொடர்ந்து, எங்களின் தற்போதைய திட்டங்களில் சில சரிசெய்தல்கள் அல்லது மாற்றங்கள் செய்யப்படலாம்,” என்று அவர் பெர்னாமாவிடம் கூறினார்.
ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்தக் கூட்டத்தில், ஒளிபரப்புத் துறைத் தலைமை இயக்குநர் அஷ்வத் இஸ்மாயில், மலேசிய ஊடக மன்றத்தின் ஊடக நடைமுறைச் சீர்திருத்த இயக்குநர் ரவீனா நகோத்ரா, மீடியா முலியா ஆலோசகர் எடி அஜீஸ் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
செயல்பாட்டு, நிதிச் சிக்கல்களை எதிர்கொள்ளும் ஊடக நிறுவனங்கள், சாத்தியமான உதவிகளை ஆராய்வதற்கும், தங்கள் ஊழியர்கள் பணிநீக்க அபாயத்தில் இல்லை என்பதை உறுதிசெய்வதற்கும் கலந்துரையாடல்களுக்கு முன்வர வேண்டும் என்று திரு ஃபஹ்மி முன்னதாகக் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டது.
உத்துசான் மலேசியா, கோஸ்மோ! செய்தித்தாள்கள் சம்பந்தப்பட்ட மறுசீரமைப்பு நடவடிக்கையைத் தொடர்ந்து, மீடியா முலியா தனது ஊழியர்களின் உரிமைகள், வெளிப்படைத்தன்மை, நலன்களைப் பாதுகாக்க வேண்டும் என்று நவம்பர் 4ஆம் தேதியன்று மலேசிய ஊடக மன்றம் வலியுறுத்தியது.
மீடியா முலியா நிறுவனத்தில், அரோரா முலியா 70 விழுக்காட்டுப் பங்குகளையும் ஓபிலன்ஸ் குளோபல் ஆசியா 30 விழுக்காட்டுப் பங்குகளையும் வைத்துள்ளன என்று ஊடக அறிக்கைகள் தெரிவித்துள்ளதாக பெர்னாமா கூறியது.
