தாய்லாந்தில் கஞ்சா வாங்க மருத்துவச் சான்றிதழ் தேவை

1 mins read
a3f9c262-9f3a-49f7-aac1-1e74a53fbd09
பேங்காக்கில் கஞ்சா விற்கும் கடை ஒன்று. - படம்: ராய்ட்டர்ஸ்

பேங்காக்: தாய்லாந்தில் கஞ்சா வாங்க மருத்துவச் சான்றிதழ்கள் தேவை என்ற நிபந்தனையை அறிமுகப்படுத்த தாய்லாந்து திட்டமிட்டுள்ளது.

மூத்த அதிகாரி ஒருவர் வியாழக்கிழமை (மே 22) இதைத் தெரிவித்தார். கஞ்சா பயன்பாட்டைக் கட்டுப்படுத்த தாய்லாந்து இந்நடவடிக்கையை எடுக்கிறது.

கஞ்சா பயன்பாட்டை சட்டபூர்வமானதாக மாற்றிய முதல் ஆசிய நாடுகளில் ஒன்று தாய்லாந்து. அதேவேளை, கஞ்சா விற்பனை, உற்பத்தி, பயன்பாடு ஆகியவற்றுக்கு உகந்த சட்டம் ஏதும் வரையாமல் தாய்லாந்து கஞ்சா பயன்பாட்டைச் சட்டபூர்வமாக்கியது.

அதனால், அந்நாட்டில் கஞ்சா விற்பனை பெரிய அளவில் சூடுபிடித்தது. நாடு முழுவதும் கஞ்சா சில்லறை விற்பனைக் கடைகள் தலைதூக்கின. குறிப்பாக பேங்காக், புக்கெட் போன்றவற்றில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு இது பொருந்தும்.

கஞ்சா பயன்பாடு சட்டபூர்வமாக மாற்றப்பட்டு மூவாண்டுகளுக்குப் பிறகு அதை வாங்க மருத்துவச் சான்றிதழ் இருக்கவேண்டும் என்ற நிபந்தனையை அறிமுகப்படுத்த தாய்லாந்து திட்டமிட்டுள்ளது. 40 நாள்களுக்குள் இந்தப் புதிய சட்டம் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மருத்துவக் காரணங்களுக்காக மட்டுமே கஞ்சா பயன்படுத்தப்படுவதை உறுதிசெய்வதே இதன் நோக்கம்.

குறிப்புச் சொற்கள்