தாய்லாந்து-கம்போடியா எல்லைப் பூசலைத் தீர்க்க கோலாலம்பூரில் கூட்டம்

2 mins read
4bf9e4c4-25ee-4ca1-b715-8bffcc849186
தாய்லாந்தின் சிசாகெட் மாநிலத்தின் காந்தாராலாக் மாவட்டத்தில் உள்ள சாலையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள தாய்லாந்து காவல்துறை அதிகாரி. அந்தப் பகுதி கம்போடியாவின் தாக்குதல் இலக்காகக் கருதப்படுகிறது. - படம்: இபிஏ

பெட்டாலிங் ஜெயா: தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையிலான பொது எல்லைக் குழுக் (GBC) கூட்டம் ஆகஸ்ட் 4ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை கோலாலம்பூரில் நடைபெறும் என மலேசிய ஆயுதப் படை அறிவித்து உள்ளது.

அந்தக் கூட்டத்தை அந்தப் படை பொறுப்பேற்று நடத்த உள்ளது.

தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையில் உள்ள பூசல்களைத் தீர்க்க பொது எல்லைக் குழு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாகவும் அந்தக் கூட்டம் கடந்த ஜூலை 28ஆம் தேதி மலேசியா முன்னிலையில் ஏற்படுத்தப்பட்ட சண்டைநிறுத்த உடன்பாட்டின் ஓர் அம்சம் என்றும் ஆயுதப் படை சனிக்கிழமை (ஆகஸ்ட் 2) வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது. 

“இம்முறை பொது எல்லைக் கூட்டம் நடத்த மலேசியாதான் பொருத்தமான நடுநிலை நாடு என தாய்லாந்தும் கம்போடியாவும் தேர்ந்து எடுத்து உள்ளன. 

ஆசியான் கண்காணிப்புக் குழுவையும் இடைக்காலக் குழுவாக தற்காப்புத் தூதுக் குழுவையும் நியமிப்பது தொடர்பான விதிமுறைகளும் நிகழ்ச்சி நிரலில் இடம்பெற்று உள்ளன,” என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இருதரப்பு எல்லை விவகாரங்களைப் பேசித் தீர்க்க தாய்லாந்தும் கம்போடியாவும் ஏற்படுத்திய அமைப்புதான் பொது எல்லைக் குழு.

எல்லைக் குழு கூட்டம் தொடர்பான விவரங்கள் பற்றி கம்போடியாவுடனும் தாய்லாந்துடனும் இணையம் வழியாக மலேசியா ஆலோசனை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுவதாக மலேசிய தற்காப்பு அமைச்சர் முஹம்மது காலித் நோர்தின் கூறியுள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையில் சமரசம் காண்பதற்கான கூட்டத்தை நடத்த மலேசியா தயாராக உள்ளது என்பதை தாய்லாந்து மற்றும் கம்போடிய தற்காப்பு அமைச்சர்களிடம் தாம் தனித்தனியாகத் தெரிவிக்க இருப்பதாகவும் ஜோகூர் பாருவில் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்துள்ளார்.

எல்லைக்குழுக் கூட்டம் கோலாலம்பூரில் உள்ள விஸ்மா பெர்விரா என்னும் உயர் ராணுவ அதிகாரிகளுக்கான நிலையத்தில் நடைபெற இருப்பதாகவும் அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்