கோலாலம்பூர்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்புடன் இம்மாதப் பிற்பாதியில் நடைபெறவிருக்கும் சந்திப்பு பாலஸ்தீனர்களின் உரிமைகளை முன்னெடுப்பதற்கு உதவியாக இருக்கும் என்று நம்புவதாக மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் கூறியுள்ளார்.
ஆசியான் உச்சநிலை மாநாட்டுக்காக கோலாலம்பூர் செல்லும் திரு டிரம்ப், ஆசியான்- அமெரிக்க உச்சநிலைச் சந்திப்பிலும் கிழக்காசிய உச்சநிலைச் சந்திப்பிலும் கலந்துகொள்ளவிருப்பதாகத் திரு அன்வார் சொன்னார்.
“பாலஸ்தீன மக்களின் உரிமைகளை உறுதிசெய்வதற்கான நீண்டகால நியாயமான வழிகளை நமது பங்காளிகளுடன் இணைந்து எப்படி உருவாக்கலாம் என்பதுபற்றி ஆக்ககரமான கலந்துரையாடல் இடம்பெறுவதை எதிர்பார்க்கிறேன்,” என்று திரு அன்வார் காணொளி மூலம் குறிப்பிட்டார்.
பரிந்துரைக்கப்பட்ட சண்டைநிறுத்தத் திட்டத்துக்கான நிபந்தனைகளுடன் கூடிய ஹமாஸின் ஒப்புதலையும் திரு அன்வார் வரவேற்றார். அது சண்டையை நிறுத்துவதற்கான நம்பிக்கையைத் தருவதாக அவர் சுட்டினார்.
“உண்மையான அமைதி உருவாவதற்கான முன்னேற்றங்களைக் காண இஸ்ரேல் அதன் தாக்குதல்களை நிறுத்தும்படி திரு டிரம்ப் அழைப்புவிடுத்தது ஊக்கமளிக்கிறது,” என்றார் திரு அன்வார்.
காஸாவுக்குள் உதவிப் பொருள்கள் துரிதமாக சென்றுசேர அனைத்துத் தரப்புகளும் பின்வாங்குவதுடன் உடனடியாக சண்டையை நிறுத்துவது எவ்வளவு முக்கியம் என்பதைத் திரு அன்வார் வலியுறுத்தினார்.
“நீண்டகால அமைதி உடனடியாக வந்துவிடாது. அதை பொறுமையுடன் படிப்படியாகக் கட்டியெழுப்பவேண்டும். உலகத்தைக் கலங்கடித்த இந்தக் கொடூரம் உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரப்படவேண்டும்,” என்று திரு அன்வார் அறைகூவல் விடுத்தார்.
கத்தார், துருக்கி போன்ற அரபுச் சிற்றரசு நாடுகள் போரை நிறுத்தவும் அரசதந்திர முயற்சிகளை ஊக்குவிக்கவும் தொடர்ந்து அவற்றின் பங்கை ஆற்றும் என்பதில் தாம் உறுதியாக இருப்பதாகத் திரு அன்வார் குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
“அமெரிக்காவும் செயல்பட முக்கிய பங்கு இருக்கிறது. குறிப்பாக, இஸ்ரேல் அதன் வாக்குறுதியைக் கடைப்பிடிக்க அமெரிக்கா அழுத்தம் கொடுப்பது அவசியம்,” என்றார் அவர்.