மலாக்கா: மலாக்கா மாநிலத் தேர்தலுக்கான தேசிய முன்னணியின் வேட்பாளர் அறிமுக நிகழ்ச்சியிலிருந்து மலேசியச் சீனர் சங்கத்தின் (மசீச) முக்கியத் தலைவர்கள் அதிரடியாக வெளிநடப்புச் செய்திருக்கின்றனர்.
தங்கள் ஒப்புதல் இன்றி எடுக்கப்படும் எவ்வித முடிவையும் ஏற்க முடியாது என்று அவர்கள் திட்டவட்டமாகக் கூறினர்.
மசீச கட்சியின் தேசியத் தலைவர் வீ கா சியோங் செய்தியாளர்களிடம் அதுபற்றிக் கருத்துரைத்தார்.
தங்களது நீண்டகாலப் பங்காளித்துவத்தை மதிக்காமல், முன்னர் தாங்கள் போட்டியிட்ட தொகுதிகள் மற்றக் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டதால் மசீச கட்சி ஓரங்கட்டப்பட்டதாக உணர்கிறது என்றார் அவர்.
“மசீச-வை ஒரு பொருட்டாகக் கருதாமல் ஓரங்கட்ட முடியாது. கட்சித் தலைவர் இங்கிருக்கும்போதே, எங்களின் உடன்பாடின்றி மசீச சார்பாக எவ்வாறு முடிவுகளை எடுக்க முடியும்?“ என்று அவர் கேள்வி எழுப்பினார்.
சனிக்கிழமை (அக்டோபர் 24) மலாக்கா அனைத்துலக வர்த்தக நிலையத்தில் நடைபெற்ற இந்நிகழ்விலிருந்து அவர், கட்சித் துணைத் தலைவர் மா ஹாங் சூனுடனும் மலாக்காவின் ஆறு மசீச பிரிவுத் தலைவர்களுடனும் வெளிநடப்புச் செய்த பிறகு செய்தியாளர்களிடம் பேசினார்.
அக்டோபர் 23ஆம் தேதி இரவு 9 மணியளவில், இந்நிகழ்வு தேர்தல் பிரசாரத்தின் தொடக்கமாக மட்டுமே இருக்கும் என்றும்,வேட்பாளர்கள் யாரும் அறிவிக்கப்பட மாட்டார்கள் என்றும் தேசிய முன்னணியின் நிர்வாகச் செயலாளர் மசீச-விடம் தெரிவித்ததாக அவர் கூறினார்.
இருப்பினும், நிகழ்விடத்திற்கு வந்தடைந்த பின்னரே வேட்பாளர்கள் அறிவிக்கப்படவுள்ளதாகக் கட்சி உறுப்பினர்கள் திரு வீயிடம் தெரிவித்தனர்.
பின்னர் நிகழ்ச்சி நிரலில் வேட்பாளர் அறிவிப்பு அங்கம் இடம்பெற்றிருப்பதை அறிந்த அவர், இந்த மாற்றம் குறித்து தேசிய முன்னணியின் தலைமைத்துவத்திடம் கேள்வி எழுப்பினார்.
அக்டோபர் 24ஆம் தேதி காலை 9 மணிக்குக் கூடிய மசீச-வின் மத்திய அரசியல் செயலகம், தேசிய முன்னணியின் கூட்டணிக் கட்சியாக மாலை நிகழ்வில் கட்சி கலந்துகொள்ள வேண்டும் என்று முடிவெடுத்தது.
ஆயினும், வேட்பாளர் அறிவிப்பு நிகழ்ந்ததால் தலைவர்கள் வெளிநடப்புச் செய்ய நேரிட்டது.
தமது அரசியல் வாழ்க்கையில் இது போன்றதொரு சூழ்நிலையை எதிர்கொண்டதில்லை என்று விவரித்த திரு வீ, தொகுதிகள் ஒதுக்கப்பட்டுவிட்டதாகக் கூறப்படுவதற்கு முன்பு, அந்தப் பங்கீடு குறித்து விவாதிக்க மசீச அனுமதிக்கப்படவில்லை என்றார்.
இந்த சர்ச்சைக்குத் தீர்வு காணுமாறு தேசிய முன்னணியின் மத்திய தலைமைத்துவத்திற்கு அவர் அழைப்பு விடுத்தார்.
“வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கு இன்னும் அவகாசம் உள்ளது. இது சரிசெய்யப்படும் என்று நான் நம்புகிறேன்,“ என்றார் திரு வீ.
