பேங்காக்: தாய்லாந்து அரசியலில் ஆதிக்கம் செலுத்திய கோடீஸ்வர அரசியல்வாதி தக்சின் ஷினவாத்தின் குடும்பம் வரும் தேர்தலில் மற்றொரு உறுப்பினரைப் பிரதமர் வேட்பாளராகக் களமிறக்குகிறது.
முன்னாள் பிரதமர் சோம்சாய் வோங்சாவத்தின் மகனும் திரு தக்சினின் மருமகனுமான திரு யோட்சனன் வோங்சாவத், டிசம்பர் 16 (செவ்வாய்க்கிழமை) அன்று பியூ தாய் கட்சி முன்மொழிந்துள்ள மூன்று பிரதமர் வேட்பாளர்களில் ஒருவர். கட்சியை வழிநடத்தும் முன்னாள் துணை நிதி அமைச்சர் திரு ஜுலாபுன் அமோர்ன்விவட், பழம்பெரும் அரசியல்வாதி சூரிய ஜுவாங்ரூங்கிட் ஆகியோர் மற்ற இருவர்.
தாய்லாந்துப் பிரதமர் அனுட்டின் சார்ன்விராக்குல் கடந்த வாரம் நாடாளுமன்றத்தைக் கலைத்ததைத் தொடர்ந்து, தாய்லாந்தில் பிப்ரவரி 8ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. அண்டை நாடான கம்போடியாவுடன் ஏற்பட்டுள்ள மோதலால் தூண்டப்பட்ட தேசியவாதச் சிந்தனையை அவர் தமக்குச் சாதகமாகக் கருதி ஆட்சிக்கு வர விரும்புகிறார்.
கடந்த 2023 தேர்தலுக்குப் பிறகு நாட்டை வழிநடத்தும் மூன்றாவது பிரதமர் அனுட்டின்.
உயிரியல் மருத்துவப் பொறியியல் இணைப் பேராசிரியரான 46 வயது யோட்சனன் இளம் நகர்ப்புற வாக்காளர்களை ஈர்ப்பார் என்பதுடன், ஷினவாத் குடும்பத்துக்கு விசுவாசமான விவசாயிகள், கிராமப்புற வாக்காளர்களின் ஆதரவைத் தக்கவைக்க முடியும் என்று பியூ தாய் கட்சி எதிர்பார்க்கிறது.
2001 முதல் 2006ன் ஆட்சிக் கவிழ்ப்புவரை பிரதமராக இருந்த தக்சின் தவிர்த்து, அவரது குடும்பம் அல்லது அரசியல் கட்சிகளுடன் தொடர்புடைய ஐந்து பிரதமர்கள் நீதிமன்றத் தீர்ப்புகள் அல்லது ஆட்சிக் கவிழ்ப்புகள் மூலம் பதவியிலிருந்து அகற்றப்பட்டுள்ளனர்.
ஆகஸ்ட் மாதம் திரு தக்சினின் மகள் பெடோங்டார்ன் ஷினவாத் கம்போடியா உடனான எல்லைப் பிரச்சினையைக் கையாள்வதில் நெறிமுறைகளை மீறியதற்காக நீதிமன்றத்தால் பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். ஊழல் குற்றத்திற்காக தக்சின் ஓராண்டு சிறைத் தண்டனையை அனுபவித்து வருகிறார்.
தாய்லாந்து அரசியலில் இருந்து மறையப் போவதில்லை என்று திரு தக்சின் சபதம் செய்திருந்தாலும், அவரது கட்சி ஆட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டது, பியூ தாய் கட்சியின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது என்று அண்மைய கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
தொடர்புடைய செய்திகள்
வரும் தேர்தல் திரு அனுட்டினின் பூம்ஜாய்தாய் கட்சிக்கும் எதிர்க்கட்சியான மக்கள் கட்சிக்கும் இடையிலான போட்டியாகக் கருதப்படுகிறது.
தாய்லாந்து தேர்தல் விதிகளின்படி, கட்சிகள் வாக்களிப்புக்கு முன்னதாக மூன்று பிரதமர் வேட்பாளர்களை நியமிக்கலாம். குறைந்தது 25 நாடாளுமன்ற இடங்களைப் பெறும் கட்சிகளின் வேட்பாளர்கள் மட்டுமே தேர்தலுக்குப் பிறகு அந்தப் பதவிக்குத் தகுதி பெறுவார்கள்.
மக்கள் கட்சி அதன் தலைவர் நத்தபோங் ரூயங்பன்யாவூட், துணைத் தலைவர்களான சிறிகன்யா தன்சகுன், வீரயோத் கன்சோச்சட் ஆகியோரைப் பிரதமர் வேட்பாளர்களாகப் பரிந்துரைத்துள்ளது.
50 மில்லியனுக்கும் அதிகமான வாக்காளர்கள் 400 நாடாளுமன்ற உறுப்பினர்கள், 100 கட்சி பட்டியல் உறுப்பினர்கள் என 500 பேரைத் தேர்ந்தெடுப்பார்கள். தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பின்னர் பிரதமர் ஒருவரை நாடாளுமன்ற வாக்கெடுப்பில் தேர்வு செய்வார்கள்.

